டெரர் கும்மி விருதுகள் 2011


முஸ்கி : காப்பி அன் பேஸ்ட் பதிவு..

அனைவருக்கும் வணக்கம்,
ஒரு இனிமையான பொழுதில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதல் முறையாக இதைப் படிப்பவர்கள் சிரமம் பாராமல் டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு மற்றும் டெரர் கும்மி விருதுகள் போட்டி விதிமுறைகள் ஆகிய இரண்டு பதிவுகளையும்  படித்துவிட்டு இதை தொடருங்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று டிசம்பர்  26-ம் தேதி உங்கள் பதிவுகளை இணைப்பதற்கான அறிவிப்போடு வந்துள்ளோம்.

முதலில் நாங்கள் கொடுக்கும் இணைப்பை தொடுத்து எங்கள் போட்டிக்கான தளத்தை திறந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பதிவு ( ரெஜிஸ்டர் ) ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் விரைவில் உங்களுக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும் என்ற தகவல் ( மெசேஜ் ) வரும். உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அந்த லிங்க் வரும்வரை தயவுசெய்து காத்திருங்கள். எதற்கும் உங்களுடைய ஸ்பேம் அல்லது ஜங்க் மெயிலையும் சோதனை செய்துகொள்ளுங்கள். மின்னஞ்சலில் ஆக்டிவேசன் லிங்க் கிடைக்கப்பட்டு அதை அழுத்தினால் நீங்கள் இப்போது பதிவுகளை இணைப்பதற்கு தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

பதிவுகளை இணைப்பதற்கு இரண்டு பிரிவுகளாக வைத்துள்ளோம். பொதுப்பிரிவில் நீங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட மூன்று பதிவுகளை மட்டுமே இணைக்கமுடியும். அடுத்து புதுமுக பதிவர்களுக்கான பிரிவு. இதில் அவர்களின் சிறந்த பதிவாகக் கருதும் மூன்று பதிவுகளை இணைக்கலாம். மேலும் புதுமுக பதிவர்கள் மட்டும் பொதுப்பிரிவில் இணைத்த பதிவுகளையும் புதுமுக பிரிவில் இணைக்கலாம். பதிவுகளைஇணைக்க கடைசி தேதி 2012 ஜனவரி 6 என்று விதிமுறைகளில் அறிவித்தோம். பல வாசகர்கள் தொடர்புகொண்டு விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் கால அவகாசத்தை நீட்டிக்க சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2012 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்க்கு பிறகு இணைக்கப்படும் பதிவுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுடைய விதிமுறைகள் பற்றிய பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இதையும் மீறி ஏதேனும் சந்தேகம் அல்லது பதிவு செய்வதில் ( ரெஜிஸ்டர் ) பதிவுகளை இணைப்பதில் பிரச்னை அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் கருத்துரைகளில் கேளுங்கள் அல்லது  contest_2011@terrorkummi.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.உங்களுக்கு  உதவுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது சுலபமான  ஒன்றுதான். கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  இணைப்பை பயன்படுத்தி எந்த பிரிவில் உங்கள் பதிவுகளை இணைக்கப்போகிறீர்கள் என்று தேர்வு செய்து உங்கள்  பதிவுகளைஇணைக்கவும். இணைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை சரியான பிரிவில் சரியான பதிவை இணைக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் ஒருமுறை  இணைத்த பதிவை மறுமுறை மாற்ற இயலாது. மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு தொடர்ந்து உங்களோடு இணைந்திருக்கிறோம். நன்றி. 
                                       

புத்திசாலி புத்திசாலிதான்

ஒரு ஊருல ஒரு புத்திசாலி... அதி புத்திசாலி இருந்தானாம்.. சாரி சாரி.. இருந்தாராம். அவருக்கு ரொம்ப தகவல்கள் தெரியுமாம்... தெசாரஸ், என்சைலோகொபீடியா, விக்கிபீடியா இதுல்லாம் கெடைக்காத தகவல்கள் கூட அவருகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாமாம். தகவல் மட்டும் இல்லாம, அவரு பொறந்ததுலேருந்து நல்லா சிந்திக்கும் அறிவு இருந்திச்சாம். புத்திசாலி இல்லையா ..?

அந்த ஊருக்கு பக்கத்து ஊருல நம்மள மாதிரியும் எடக்கு மடக்கா செய்யற ஒரு சின்னவர் இருந்தாராம். அவரு எதுக்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவாராம். அவர புத்திசாலி ஐயாகிட்ட அனுப்பினா, எப்படியாவது திருத்திடலாம்னு அவங்கப்பா கிட்ட பக்கத்து வீட்டு ஐயா ஐடியா சொன்னாராம். அந்தப்பாவும் அந்தப் சின்னவர புத்திசாலிகிட்ட அழைச்சிகிட்டுபோக முடிவு   பண்ணாராம்.

புத்திசாலிகிட்ட அழைச்சுக்கிட்டு போகப் போறாங்கனு தெரிஞ்சதும் அந்த சின்னவரு அவரப் பத்தி ஊரார்கிட்ட பல தகவல்கள் தெரிஞ்சிக்கிட்டாராம். முக்கியமா அவரோட  மீசை அழகா இருக்கும்னு யாரோ சொன்னாங்களாம். நம்ம சின்னவருக்கு ஒரு வழியா ஐடியா வந்திடிச்சு, எப்படி அவர மடக்கறதுன்னு.

அந்த நல்லநாளும் வந்தது.. சின்னவரோட அப்பா அவர அழைச்சிக்கிட்டு அந்த புத்திசாலி வீட்டுக்கு போனாராம். அங்கப் போயி அவரு கிட்ட அவனப் பத்தி சொன்னாராம். எல்லாத்தையும் நல்லா காது கொடுத்து கேட்ட புத்திசாலி மனுஷரு, யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தார். பையன்கிட்ட எதுக்கெடுத்தாலும் 'பந்தயம்' கட்டறது தப்புன்னு சொன்னார். அவன் பந்தயம் கட்டுறதா நிறுத்தணும்னா, என்ன வேணும்னு கேட்டார். அதுக்கு சின்னவர் சொன்னாரு "உங்க முகத்தில இருக்கே மீசை.. ..ஒருபக்க மீசைய எடுத்துடணும்". கொஞ்ச நேரம் யோசிச்ச புத்திசாலி, "சரி, நா எடுத்துட்டா, நீ வாக்கு கொடுத்தபடி பந்தயம் கட்டுறத நிறுத்திடுவாயா?"னு கேட்டார். "ஆமாம் நிறுத்திடுவேன்", வந்தது பதில். 

அவரும் ஷேவிங் க்ரீம், ரேசர் சகிதமாக வந்தார். அப்ப, கூட இருந்த அப்பா, அவர் கிட்ட, "வேணாம்.. வேணாம்.. இங்க வரும்போது, எப்படியாவது அவர ஒரு பக்க மீசையோட நடமாடச் செய்யறேன்னு வீட்டுல எங்கிட்ட 'பந்தயம்' கட்டிட்டு வந்தான்", என சொன்னார்.

என்னதான் இருந்தாலும் புத்திசாலி புத்திசாலிதான.? அவரு, தான் சொன்னபடி செய்யப் போறேன்னு சொல்லிட்டு, அவங்களுக்கு முன்னால நேர சைடுவாக்ல திரும்பி "ஒருபக்க மீசைய எடுத்திடறேன்"னு சொல்லிட்டு மழிக்க ஆரம்பிச்சாரு..
ஒருபக்கம் (frontside)       மறுபக்கம் (backside)
-----------------------------------------------------------------       
( ஒருபக்க / frontside ) மீசையை எடுத்த பின்னர்
----------------------------------------------------------------

 

டெரர் கும்மியின் இனிய இம்சை

பெரும்பாலும் முன்பின் பார்த்திராத வலை நண்பர்கள் சிலரில் நாங்கள் ஒரு குழுவாக டெரர் கும்மி எனும் வலைத்தளம் சென்ற ஆண்டு இதே நாளில் ஆரம்பித்தோம். முதன்முதலில் blogspot முகவரியிலேய செயல் பட்ட வலைத்தளம் 'terrorkummi.com' என பெயர் மாறியது. சமீபத்தில் அந்த வலைதளத்தில் ஹன்ட் ஃபார் ஹின்ட் என்ற கேம் கலை/களை கட்டியது, உங்களில் பலருக்கும் நினைவில் இருக்கலாம்.

தற்போது முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வலைதள நண்பர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையாக விருது வழங்கவுள்ளோம்.



நீங்களும் உங்களுடைய படைப்புகளுடன் இதில் கலந்து கொள்ளலாமே. உங்கள் நண்பர்களுக்கும் கலந்துகொள்ள பரிந்துரைக்கலாமே.

கலந்து கொண்டு இதனை சிறப்பித்து தருமாறு வேண்டுகிறேன். தங்களின் படைப்புகள் அனுப்பப்பட்டு அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவும் வாழ்த்துக்கள்.

நன்றி. 

டவுட்டு சாமி.. டவுட்டு..

:
விசாகப்பட்டினம்: .......இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. 5 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. -- செய்தி (ஆன்லைன்  நாளேட்டில் செய்தி )

 

டவுட்டு :
மேற்கிந்திய தீவு அணி 9 (ஒம்பது) விக்கெட் இழந்திச்சு ..
இந்திய அணி அஞ்சு (5 ) விக்கெட் இழந்திச்சு.
9 - 5 = 4 தான......?

------------------------------------------

செய்திகளுக்கான பிரத்யேக சின்னத்திரை தொலைக்காட்சி ஒன்றில் மூணு நாளைக்கு முன்னாடி, செய்தி வாசிப்பவர் சொன்னது.. 
"மயிலாடுதுறையில் வசிப்பவர்கள் தங்கள் ஊரை தனி மாவட்டமாக்க வேண்டுமென கோரிக்கை. மக்கள் தொகை அடிப்படையில் இங்கு ஒன்பது புள்ளி ஐம்பது லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.. இதை விடக் குறைவாக மக்கள் இருக்கும் பெரம்பலூர் போன்ற ஊர்கள் மாவட்ட தலைமையாக மாக இருக்கும் பொது ஏன், இந்தனையு தனி மாவட்டமாக ஆக்கக் கூடாது  என்று..     "


டவுட்டு : 
அதென்ன 'ஒன்பது புள்ளி ஐம்பது லட்சம்' ?  யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்..!!

------------------------------------------
3
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
ஊக்கமது கைவிடேல்  -----  இப்படியும் இருக்கு

கிட்டாதாயின் வெட்டென மற -
கெடைக்கறது கெடைக்காம போகாது..
கெடைகாதது கெடைக்கவே கெடைக்காது.. (மாடர்ன்  மேட்டர்) 
 ----------இப்படிலாமும் இருக்கு..

டவுட்டு  :  எதை ஃபாலோ பண்ணுறது ?

கடற்படை தினம் - 2011

நன்றி : cityofvizag.com
1971ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி,  இந்திய கடற்படை பாகிஸ்தான் கடற்படை மீது, கராச்சி கடல்தளம் அருகில் அதிரடித் தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது. அதனை நினைவூட்டும் தினமாக கடற்படை தினம், விசாகப்பட்டினத்தில் வருடாவருடம் டிசெம்பர் நான்காம் தேதி கொண்டாப்படுகிறது. இவ்வருடமும் அவ்வாறு கொண்டாடப்படும் வேளையில் சென்ற வருடம் போல குடும்பத்துடன் சென்று கண்டு களித்து வந்தேன். சென்ற வருடம் அதனை ஒரு குறுஞ்செய்தியாக இந்தப் பதிவில் சொல்லி பின்னர் விளக்கமா எழுதுவதாகச் சொன்னேனே தவிர அதனை சொன்னதுபோல செய்யவில்லை. தற்போது சொல்லாமலே(No BuildUp), நேரடியாக அது பற்றி இந்தப் பதிவில்... 

பிற்பகல் மூன்றரை மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றோம்.. இல்லையென்றால் சரியான இடம் கிடைக்காதே. அகண்டு விரிந்த பீச்சாங்கரை என்றாலும் முக்கியமான நிகழ்ச்சிகளான பாம் வெடிப்பது, ஹெலிகாப்டலிருந்து கடலில் இருக்கும் சிறிய போட் மீதுள்ள ஆட்களை காப்பாற்றி ஹெலிகாப்டரில் ஏற்றுவது.. இதெல்லாம் பார்க்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட இடத்தில் முன்னரே சென்று இடம் பிடிக்க வேண்டும்.

சுமார், மாலை 4:30 மணியளவில் விண்ணை பிளந்து கொண்டு கடற்படை விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிறிய இடைவெளி விட்டு வந்தபடி இருந்தன.
 
முன்பொருமுறை அகமதாபாத்தில் ஏர்-ஷோ (Air-Show) பார்த்திருக்கிறேன். விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் சிறப்பு விமானங்கள் அதில் 'maneuvers '  எனப்படும் வேகமான குட்டிக் கரணங்கள் இருக்கும். அது விமானப் படையின் சாகசங்கள்.

இதிலோ, அந்தளவிற்கு விமான குட்டிக்கரண சாகசங்கள் இல்லை, இது கடற்படைதானே.  ஆனாலும் வேக வேகமாக விமானங்க சத்தத்துடன் கடற்கரை  வான்வெளியில் சென்றது பார்க்க நன்றாக இருந்தது. இடையிடையே சில ஹெலிகாப்டர்களும் வந்து சென்றது. விண்ணைப் பார்த்தபடியே இருந்த கண்கள் கீழே கடல் நீரில் கடற்படை கப்பல்கள் வருவதை முதலில் கவனிக்கவில்லை. ஆயினும் பரவாயில்லை, கப்பலின் வேகம் மிகவும் குறைவானதே.. அதனால் நன்றாக கப்பலை கவனிக்க முடிந்தது.. சுமார் இருபது கப்பல்கள் அணிவகுத்து சென்றன. அவசர வேலை இருந்தால் கல்யாணத்திற்கு சென்று 'தலை காண்பிப்பது' போல, ஒரு நீர்மூழ்கி கப்பலும் தலை(யை மட்டும்) காண்பித்தது. முழுவதுமாக வெளியே தெரிந்தால் அதனுடைய சிறப்பு வெளியே தெரியாமல் போய்விடுமே.
 


மன்னையில்(பிறந்த ஊர்)  இருக்கும் பெரிய குளக்கரையில் அமாவாசை, அந்தி சாய்ந்த வேளை, தெரு விளக்கு இல்லாத போது எதிர் தெருவில் இருக்கும் வீடுகளின் விளக்குகள் குளத்திலுள்ள நீர் மீது பிரதி பலிப்பதுபோல, கடற்கரையிலிருந்து சுமார் இருநூறு மீட்டர் தொலைவில், அக்கரையில் வரிசையாக வீடுகள் இருப்பது போல, கப்பல்களில் ஏற்றப்பட்ட மின்விளக்குகள் அழகாக கடல் தண்ணீரில் பிம்பமாகவும் தெரிந்தது. அந்த இருட்டு நேரத்தில் கடற்கரை மற்றும் மலைப்பகுதி சேரும் மேற்கு திசையிலிருந்து வான வேடிக்கைகள் சுமார் பத்து நிமிடம் நீடித்தது.. அத்துடன் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.....

மொத்தத்தில் வித்தியாசமான ஒரு மாலை நேரம், குடும்பத்துடன் கழிக்க முடிந்தது. இந்த ஊரில் இருக்கும் வரையில்.. இந்த நிகழ்ச்சியை வருடா வருடம் பார்த்தாலும் அலுப்பு தட்டாத ஒன்று என்றே தோன்றியது.

எதிரிகளிடமிருந்து நாட்டினை காக்கும் பொறுப்பில் இருக்கும் முத்தரப்பு  பாதுகாப்பு படை வீரர்களின் தொண்டும் (service), தியாகமும் (sacrifice) இந்தப் பதிவு எழுதும் / படிக்கும் போது நன்கு நினைவில் வருகிறது, இல்லையா ?
 --------------------------------------------------------