வலைத்தளம்-வான்புறா (சிலேடை)

சிலேடை : புறாவும், வலைத்தளமும் (நேரிசை வெண்பா)

விண்ணில் பறக்கும்; விடுசொல் தொலைசேர்க்கும்
மண்ணில் மனிதருக்கு மாமகிழ்ச்சி யூட்டும்;
விலைகொடுத்துச் செய்த வேலைகளு முண்டாம் ;
வலைதளம் வான்புறாவாய் வந்து !


(1) விடுசொல் தொலைசேர்க்கும்  : நாம் விடுக்கும் சொல்லை தொலைவான இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும்.
(2) விலைகொடுத்துச் செய்த வேலைகளு முண்டாம் :
        (a) வலைத்தளம் : கட்டுமானப் பணிகளால் ஆனது.
        (b) புறா  : தனது உழைப்பை விலையாகக் கொடுத்து வேலை செய்து கூடு கட்டும். 

நிலவும் செருப்பும் :நேரிசை வெண்பா (சிலேடை )


உடன்சேர்ந்து வந்திடுமே, உள்ளங்கால் தொட்டும்;
நடவாசல் சேர்ந்திடினும், நாடா - விடங்காண் ;
உயர்வாய் மழலைகா ணோவியமுங் கொண்டச்
செயலில் நிலவாஞ் செருப்பு !

செருப்பு :
(1) உடன்சேர்ந்து வந்திடுமே : அணிந்து செல்லச் செல்ல நம்முடன் சேர்ந்துவரும்.
(2) உள்ளங்கால் தொட்டும் : உள்ளங்கால் கீழ், தொடுமாரு அணியப்படும்.
(3) நடவாசல் சேர்த்திடினும், நாடா - விடங்காண் ; நடக்கும் வாசற்படி வரை வந்தாலும்... வீட்டினுள் / கோவிலினுள் செல்லாது... கண்டாயோ !
(4) உயர்வாய்த் தெரியு மோவியமுங் கொண்ட : உயர்வான / போற்றக்கூடிய ஓவியம் தன மீது வரையப்பட்டிருக்கும்.(குழந்தைகள் செருப்பு)

நிலவு :
(1) உடன்சேர்ந்து வந்திடுமே : நடந்து / ஒடி / வாகனத்த்தில் செல்லச் செல்ல நம்முடன் சேர்ந்துவரும்.
(2) உள்ளங்கால் தொட்டும் : கால் நிலவு (பிறை நிலவு) வருமாயின் அது கண்டு உள்ளம் பாய்ந்து பறித்திடத் தொடும்படி ஆசையூட்டும்.
(3) நடவாசல் சேர்த்திடினும், நாடா - விடங்காண் ; நிலவு(ஒளி) நடக்கும் வாசற்படி வரை வந்தாலும்... வீட்டினுள் / கோவிலினுள் செல்லாது... கண்டாயோ !
(4) உயர்வாய்த் தெரியு மோவியமுங் கொண்ட: உயர்வான / போற்றக்கூடிய ஓவியம் தன மீது வரையப்பட்டதுபோல இருக்கும். (பாட்டி வடை சுடுவது கேட்ட குழந்தைக்கு.)

செயலில் நிலவாஞ் செருப்பு : இவ்வாறான செய்கையினால் / ஒத்த பண்பினால் நிலவுபோல் ஆகுமே செருப்பு.