வஞ்சப்புகழ்ச்சி அணி - 1 (12-082017)

வஞ்சப்புகழ்ச்சி அணி  :
  வஞ்சம் + புகழ்ச்சி = வஞ்சப்புகழ்ச்சி;
  தமிழின் அணி வகைகளுள் ஒன்று வஞ்சப்புகழ்ச்சி அணி.    
  ஒருவரை புகழ்வது போல இகழ்வதும், இகழ்வது போல புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி எனப்படும்.

(மா விளம் தேமா --- அறுசீர் கலிவிருத்தம் )

அறிவி லாதவன் நீரே
...அன்பி லாதவன் நீரே
குறிப்பி லாதவன் நீரே
....கூர்மை யிலாதவன் நீரே
மதியி லாதவன் நீரே
...வலிமை யிலாதவன்  நீரே
சதியில் எழுந்தவிப் பாடல்
...சரிந்து மாறிய தேகாண் !

# சதியில் - விரைவில் , சீக்கிரத்தில்
# சரிந்து மாறிய தேகாண் -- சொல்லிய பொருள் 'சரிந்து' வேறு பொருள் தருமாறு மாறியதை காண்பாயோ !

அறிவில்லாதவன் = அறிவில் + ஆதவன் ( சூரியன் ) போன்று பிரகாசிப்பவன் 

மடக்கணி - 1 (10-08-2017)

 நேரிசை வெண்பா : மடக்கணியாக 
மாலை மலர்ந்திட வாடும் மனத்தினுள்;
மாலை மலர்ந்திட வாடும்பூ - சோலைப்பூ
மாலையில் சேர்ந்த மணத்தால் பெருமின்பம்
மாலையில் சேர்ந்த மணம் !

(1) மாலை வேளை வந்துவிட்டால், தலைவனின் வரவிற்காக வாடும், தலைவியின் மனம்.
(2) (பூ)மாலை நேரக்கணக்கில் மலர்ந்து வாடிவிடும் சோலையில் பூக்கும் பூ. (1க்கு இது உவமை)
(3) மாலை சூடி (திரு)மணத்தால் சேர (மனமும்) இன்பமடையும்,.
(4) மாலையாக கோர்த்த நிலையில் 'பூக்கள்' தரும் இன்பம் போல (மணம்போல)..
# இது மடக்கணியாகுமா ?

சொல் பின்வரு நிலையணி : 09-08-2017


*******************************
படிக்கும் படிப்பைப் பயனாய்ப் படிக்கப்,
படித்தார் படியே படிப்பாய் ; - படிப்பால்
படியி லுயர்துப் படித்தநல் லோர்கீழ்ப்
படிந்தாற் பலனே, படி
*******************************