'சொல்வன்மை' பற்றிய 'ஒருவிகற்ப நேரிசை வெண்பா'


திருக்குறளை ஈற்றிரண்டு அடிகளாய்ச் சேர்த்து
'சொல்வன்மை' பற்றிய 'ஒருவிகற்ப நேரிசை வெண்பா'
**********
சொல்லும் மனச்சொல் சுடவேண்டா மென்பதனைச்
சொல்லும் வகையாகச்  சொன்னாரே - சொல்போட்டு
சொல்லுக சொல்லில் பயனுடைய, சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
***********

இயற்கை போற்றி : எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் : ( பாட்டியற்றுக 11, பயிற்சியில் நான் எழுதிப் பதிவிட்ட பாடல்) :
நன்றி  : பைந்தமிழ்ச் சோலை (மரபு பூக்கள் மட்டும்)
இயற்கையை அளித்த 'இறையே போற்றி' :
 ****************************
செவ்வியுடைப் புவிதன்னைச் செய்து வைத்தாய்
....செங்கதிரோன் ஒளிகொண்டு நிறைத்து வைத்தாய்
இவ்விரண்டைப் பலபொருளால், இணைத்து வைத்தாய்
.....இவையாவும் ஒருசேர இயங்க வைத்தாய் !
எவ்வுயிர்க்கும் பயனாகும் இவைய னைத்தும்,
...இப்புவியிற் பலகாலம் இருக்கச் செய்தாய் !
இவ்வுலகம் வந்தவர்கள் இயல்பாய் வாழ,
....இயற்கையினை எமக்களித்த இறையே போற்றி !
 ****************************


 கீழ்கண்டவை : முகநூல் பக்கத்திலிருந்து தெரிந்துகொண்டவை, உங்கள் பார்வைக்காக (நன்றி பாவலர் ஐயா, பைந்தமிழ் செம்மல் வள்ளிமுத்து ஐயா )

பொது இலக்கணம்.
*அரையடிக்கு நான்கு சீர்கள் பெற்று, ஓரடிக்கு எட்டுச் சீர்களும் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,(பொழிப்பு மோனை 1'3' சீர்களில் அமைவதும் சிறப்பு. கருத்தின் முதன்மை வேண்டிப் பலரும் பார்ப்பதில்லை.)
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த. நான்கு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று,
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* அரையடிக்கு "காய்,காய்,மா,தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏ, ஆ, ஆல், ஓ, வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு
முடிவது(ஏகாரம் சிறப்பு.)
தனிப்பாடலாயின்(முத்தகம்) ஏகாரமே சிறப்பு.
தொடர்பாடலாயின்(குளகம்) எப்படியும் முடியலாம். இறுதிப் பாடலின்
இறுதிச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு
"எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.
காய்ச்சீரெனில் எக்காயும் வரலாம்.
மாச்சீர் எனில் தேமா, புளிமா எதுவும் வரலாம்.
ஆனால் அரையடியின் ஈற்றுச்சீரான நான்காம் சீரும், எட்டாம் சீரும் "தேமாச் சீராகவே வரல் வேண்டும்."
முதல்சீர் எக்காய்ச்சீரில் தொடங்குகிறதோ அதே காயில் அடுத்த அடியின் முதற்சீரும் தொடங்குதல் நன்று. ஓசை சிறக்கும்.