நண்பனிடம் மாட்டிகிட்டு முழிச்ச அனுபவம்

நண்பர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் கலாய்த்துக் கொள்வது ரொம்ப சகஜம்தானே. அதுமாதிரி ஒரு அனுபவத்தை இங்கு பகிரவே இந்த பதிவு.

நான் : வாடா, மாப்ளே. ஊட்டுல எல்லாரும் சௌக்கியமா? என்னடா காலைலேர்ந்து ஆளை காணுமேன்னு பாத்தேன்..

அவன் : ஊட்டுல எல்லாரும் சௌக்கியம்தான்.... ஹோம் வோர்க்கு, அசைன்மெண்டு.... அப்பப்பா... தாங்கல... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னுதான் இப்ப இங்க வந்தேன்..

நான் : சரிதான்.. பொழுது போக்கா நா சில கேள்வி கேக்குறேன்.. பதில் சொல்லு பாக்கலாம்..

அவன் : சரி.. ஆரம்பி..

நான் : மூணு ஸ்டெப்புல ஒரு யானைய பிரிஜ்ஜுக்குள்ள எப்படி வெக்கலாம் ?

அவன் : ???

நான் : ஸ்டேப் ஒண்ணு - ஃபிரிஜ்ஜுக் கதவ தொறக்கணும்
ஸ்டேப் ரெண்டு - யானைய வெக்கணும்.
ஸ்டேப் மூணு - பிரிஜ்ஜுக் கதவ மூடனும், அம்புட்டுதான்.

அவன் : (ஆண்டவா... நா வேறெங்காவது போயிருக்கலாம் ) ஹி.. ஹி.. ஹி..

நான் : ஒக்கே.. இப்ப சரியா சொல்லு .. மூனே ஸ்டெப்புல ஒரு நீர்யானைய எப்படி பிரிஜ்ஜுக்குள்ள வெக்கலாம்..

அவன் : நீ சொன்ன மூணு ஸ்டெப்பு யானை கதை மாதிரியே.. யானைக்கு
பதிலா நீர்யானைய வெச்சிட்டு வேண்டியதுதான்..

நான் : அவ்ளோ கஷ்டப்பட வேண்டாம். ஒரு மிருகத்த வெச்சு வளக்குறதே கஷ்டம், இதுல எதுக்கு ரெண்டு மிருகம். நா சொன்ன மூணு ஸ்டெப்புல ரெண்டாது ஸ்டெப்பு மட்டும் 'தண்ணிய பிரிஜ்ஜுக்குள்ள ஊத்த வேண்டியதுதான்'. அதான் யானை ஏற்கனவே உள்ள இருக்குதே.

அவன் : (அய்யோ.. அய்யோ.. தாங்கலையே.. ஸ்கூல் வோர்க்கே தேவலையே) நா அப்புறம் வரேண்டா..

நான் : ஹேய்.. நில்லுடா.. இன்னும் ரெண்டே ரெண்டு கேள்வி மட்டும் தான் பாக்கி.. ஒரு பறவை வானத்துல பறக்கும் பொது முட்டை போட்டுச்சாம்.. ஆனா முட்டை கீழே விழலையாம்.. எப்படி?

அவன் : அது ஆண் பறவையா இருக்கும்..

நான் : மாப்பு.. நான்தான் முட்டை போட்டுச்சுனு சொன்னேனே.. அது எப்படி ஆண் பறவையா இருக்கும்.. -- சரி சரி.. காரணம் என்னன்னா.. அது 'Snaggi' போட்டிருந்துச்சி..

(நண்பன் ஓட ஆரம்பிச்சான்.. விடுவேனா நா.... மடக்கி பிடிச்சி அடுத்த கேள்விய கேட்டேன்..)

நான் : இன்னும் ஒண்ணுதான் பாக்கி.. காட்டுல நடந்த முக்கியமான கூட்டத்துக்கு சிங்கம் தலைமையில, புலி, கரடி, மான், காண்டாமிருகம், எல்லாரும் வந்திருந்தாங்க.. ஒரு ஆளு மட்டும் வரலை.. யாருன்னு சொல்ல முடியுமா... அது யாரு தெரியுமா?

அவன் : ------- என்னடா சின்ன புள்ளதனமா இருக்கு.... மொட்டையா கேட்ட எப்படிடா சொல்லமுடியும்..

நான்: மொட்டையா இல்லடா... நா மொக்கையா கேட்டேன்.. சரி.. கூட்டத்துக்கு போகாதது யானைதான்..

அவன் : அதெப்படி சொல்ல முடியும் ?

நான் : அது தான் (தண்ணியோட) பிரிஜ்ஜுக்குள்ள இருக்குதே..

அப்புறம் அவன் நாலு நாளைக்கு என்ன பாக்காவே மாட்டேனுட்டான்.... நீங்களே சொல்லுங்க, நா செஞ்சது தப்பா ?
--------------------

டிஸ்கி - 1 : நா கூட 'நண்பேண்டா' !

டிஸ்கி - 2 : தலைப்பு சரியா இல்லைனு நெனக்கறீங்களா? தலைப்புலாம் சரிதான்.. 'அவன்' தன்னோட 'நண்பனிடம்' (எங்கிட்டதான்) மாட்டிகினு முழிச்ச அனுபவமுங்கோ !


ஜுனூன் தமிழ்

பாகம் 1:
90 களில், தேசியத் தெலைக்காட்சியில் வந்த 'மெகாத் தொடர்' ஜுனூன், உங்களுக்கு நினைவிருக்கலாம்.. அதை, தமிழ் வசனத்தில் பார்த்து / கேட்டு தமிழார்வலர்கள் ரொம்பவே நொந்து போயிருப்பாங்க..

ஆங்கிலத்தில் 'I will to go chennai tomorrow', என்பதற்கு பதிலாக 'go tomorrow, chennai will I to' என்று சொன்னால், எந்த அளவுக்கு ஒரு 'ஆங்கிலப் பிரியர்' வருத்தப் படுவாரோ, கண்டிப்பாக அதைவிட, நமது 'தமிழார்வலர்கள்', ' ஜுனூன்' தமிழ் கேட்டு வருந்தியிருப்பார்கள்..


பாகம் 2 ------------------------------------------------
அருண் நன்றி

? பண்ணியிருப்பாங்களோ யூஸ் 'இணையதளத்தை' சொன்ன தம்பி அருண் , நம்ம
.. இப்படித்தான் ...தெரியுது இப்போ
..எழுதிருப்பாங்கன்னு யோசிச்சு யோசிச்சு எப்படி வசனங்கள் மெகாத்தொடர் 'ஜுனூன்'

.தீர்ந்துடிச்சு சந்தேகம் இருந்த, நாளா ரொம்ப
-
-----------------------------------------------
பாகம் 3 :
என்னடா சம்பந்தமே இல்லாம ஏதோ நடுவுல (மேல) எழுதியிருக்கேன்னு என்னை திட்டுறீங்களா... மேலே உள்ள இரண்டாவது பாகத்தை , காபி(copy) செய்து, பின்வரும் 'இணையதள' முகவரிக்கு சென்று கொடுக்கப் பட்டுள்ள பெட்டியில் பேஸ்டு(paste) செய்யவும். பின்னர் மூன்றாவது ஆப்ஷனான 'Reverse Wording' கிளிக் செய்யவும்.

http://textmechanic.com/Reverse-Text-Generator.html

சும்மா அதிருதில்ல.. ... ?

காரணம் இதுதான்.....என்னோட இந்த பதிவ படிச்சிட்டு கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன யாவருக்கும் நன்றிகள்.
இதோ அதுக்கான விடை(கள்)


1) அலுவல் பணி அதிகம். - கொஞ்சம் அதிகம்தான், ஆனா, வலைபதிவுக்கு கொஞ்சமாவது நேரம் இருக்கத்தான் செய்யுது..

2) தொடர்ந்து வெளியூர் பிரயாணம், - ஹீ ஹீ.. ஜஸ்டு ஒரு 48 மணிநேரம்தான் வெளியூருக்குப் போனேன்.

3) வீட்டுல இன்டர்நெட்டு பிராப்ளம் - எங்க, வூட்டு 'நெட்டு' ஸ்ட்ராங்காதான் இருக்குது..

4) ஆபீசுல 'பிலாக்க' (blog ) பிளாக்கு(block) பண்ணிட்டாங்க - இப்போதைக்கு 'முகப் புத்தகம் (ஃ பேஸ்புக்), ஆர்குட், யூடுப் அதெல்லாதான் 'blocked'.

6) நா 'போஸ்டுமன்' இல்லை -- இல்லைத்தான்.. அதுக்காக, 'வலைப்பூ' பக்கம் வராமலோ, போஸ்டு போடாமலோ இருக்க முடியாதா என்ன...

எனவே, சரியான விடை
5) சரக்கு எதுவும் இல்லை (மொக்கை கூட போட முடியலே)

காரணம் என்ன ?

ஒரு வாரமா, நா போஸ்டு எதுவுமே போடலை.. காரணம் என்னவா இருக்கும்,

1) அலுவல் பணி அதிகம்..
2) தொடர்ந்து வெளியூர் பிரயாணம்,
3) வீட்டுல இன்டர்நெட்டு பிராப்ளம்.
4) ஆபீசுல 'பிலாக்க' (blog ) பிளாக்கு(block) பண்ணிட்டாங்க
5) சரக்கு எதுவும் இல்லை (மொக்கை கூட போட முடியலே)
6) நா 'போஸ்டுமன்' இல்லை..

சரியா கண்டு பிடிச்சா, 'சிறந்த அனுபவமுள்ள blogger' ன்னு பட்டம் தரப்படும்.


ஹிந்தி வாத்தியாரு..

ஒரு படத்துல, வடிவேலோ, செந்திலோ... ஹிந்தி தெரியும்னு சொல்லிக்கிட்டு திரிவாரு..'இதர் ஆவோ' (இங்க வாங்க), அதுக்கு மட்டுமே அர்த்தத்த தெரிஞ்சுகிட்டு, 'அங்கிட்டு போங்க' ன்னு சொல்லுறதுக்கு ஹிந்தில என்னான்னு கேட்டா.. கொஞ்சம் தூரக்க போயிட்டு, அங்கேருந்து நம்மள 'இதர் ஆவோ'ன்னு கூப்புடுவாரு...

இங்ககூட நம்ம ஹிந்தி வாத்தியாரு, எப்படி அர்த்தம் சொல்லுறாரு பாருங்க. சரியான அர்த்தம் '( )'ல இருக்குது.

ஓவர் (ஆமாம் ரொம்ப ஓவருதான்..) டு 'ஹிந்தி வாத்தியார்'டு

ஸ்டார்ட்
மியூசிக் :

1)
தும்
கோன் ஹே(ய்) )?
தும்மலோட 'கோணி'கிட்ட போலாமா ஐயா?
(நீ யாரு ?)

2)
ஆப் கிதர் கயதே ?
ஆப்பு வெச்சது கிரிதர் 'கைதயா' (கழுதையா)?
(நீங்கள் எங்கு சென்றீர்கள்)

3)
ஹம் சாத், சாத் ஹே !
ஹூம்.. சாத் சாத்ணு சாத்திட்டானே !
(நாம் கூட்டு கூட்டாக இருப்போமே !) ['சாம்பார்' யார்ன்னு கேக்கப்டாது]

4)
அச்சி ஹவா ஆத்தீ ஹே .
அச்சுல அவ(ள்), 'ஆத்தா' போல இருக்குறா.
(நல்ல காற்று வீசுகிறது)

5)
ஏக், தோ, தீன், ச்சார், பாஞ்ச்.. வாரே, வாரே, வாஹ்.
ஒரு தபா, 'ஸாரு', 'தீ'யில பாஞ்சு வெளியே வந்தாரு.
(ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு.. ஆஹா, ஆஹா.. அற்புதம்.)

எங்க ஊரு கிரிகெட்டு !

ஸ்கூல், காலேஜ் டேஸ்ல நா ரொம்ப கிரிக்கெட் பாப்பேனுங்க.... முக்கியமா 'காமெண்டரி' நல்லா காதுல விழனும்.. அப்படி இல்லேன்னா கிரிக்கெட் பாக்குற சுவாரஸ்யமே இருக்காது.. எனக்கு பிடிச்ச காமேன்ட்டேட்டர்கள்
1) Geofrey Boycot
2) Tony Greig,
3) Sunil Gavaskar etc..
4) Harsha Bhogle ( அவரு, அகமதாபாத் ஐ.ஐ.எம் ல எம்.பி.ஏ. படிச்சவரு)

நவஜோத் சித்து காமெண்டரி ரொம்ப தமாஷா.. இருக்கும்.... தமாஷா மட்டும் ரசிக்கலாம்.. மத்தபடி கிரிக்கெட் ப்ரோ ஃபேஷாநலிஷம் இருக்காது...

கவாஸ்கர் சொல்லுவாரு, கொஞ்சம் செட்டில் ஆயிட்டா, பேட்ஸ்மேனுக்கு கிரிக்கெட் பந்து, கால்பந்து (ஃபுட்பால் சைசுல) போலத் தெரியுமாம்..... அத கேட்டுத்தான் எங்க தெருவு கிரிக்கெட்டு பிரியர்கள் இப்படி ஆடுறாங்களோ ?


விநாயக சதுர்த்தி

விநாயகனே வினை தீர்ப்பவனே ! வேழ முகத்தோனே, ஞான முதல்வனே..

அனைவருக்கும், விநாயக சதுர்த்தி பண்டிகை (11-09-2010), வாழ்த்துக்கள். தொடங்கும் செயலனைத்தும் விக்னமில்லாமல் (தடையில்லாமல்) வெற்றிக் கனியை தந்திட, ஆணை முகத்தோனை வழிபடுவோம்.
முடிந்தால் இதனையும் காணவும்.

நன்றி : http://engalblog.blogspot.com, http://engalcreations.blogspot.com, என்னை ஓவியம் வரைய தூண்டியமைக்கு.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

ஒருவருடைய குணங்கள் அவர் சாப்பிடும் உணவு வகைகளை பொருத்தும் காணப்படும் என்பர். நாம் சாப்பிடும் உணவு அளவோடும், கட்டுப்பாடோடும் இருக்கவேண்டும் என்பதாக தெரிகிறது. உணவுக் கட்டுப்பாடு என்பது ஒருவருடைய பழக்கத்தில் வந்தால் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த 'கட்டுப்பாடு' வருவதற்கு, விரதமிருத்தல் அவசியமாகும்.

மொழி, இன, மத வேறுபாடின்றி இந்த 'விரதம்' இருக்கும் பழக்கம் பலதரப்பட்ட மக்களிடம் இருந்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய சமூகத்தினரால் கடைபிடிக்கப் பட்டு வருவது, 'ரமலான்' மாதமாகும். இந்த ரமலான் நோன்பிருந்து, நாளை புனித ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை இன்ப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொந்த முயற்சி

முடிஞ்சவரைக்கும்  அடுத்தவங்கள காப்பியடிக்காம, அட்லீஸ்ட் ஈயடிச்சாங்காப்பி  அடிக்காம இருக்கணும்னு நா நெனைப்பவன்.. ( நெனைப்பு பொழப்ப கெடுக்கும்).

அதனால தான், நானே சொந்தமா என்னோட கையால எடுத்த ஃபோட்டோக்களை  நீங்கல்லாம் பாக்குறதுக்கு இங்கிட்டு கொடுத்ருக்கேன்.

மோ. க.  காந்தி.
ஜவஹர்லால் நேரு. 


நானே சொந்த முயற்சி பண்ணி  கண்டுபிடிச்ச 'கார்' கீழே படத்துல இருக்குது.
 

பாத்தீங்களா.. நல்லா இருக்குதானே ?.. நீங்களும் இனிமே முடிந்தவரைக்கும் 'தன் கையே தனக்குதவி' னு  எல்லாத்தையும் சொந்தமா செய்ய டிரை பண்ணுங்களேன்..

என்னமோ கேக்க வரீங்கன்னு நெனைக்கிறேன்..

1 )  நா எடுத்த ஃபோட்டோக்களை பத்தியா..?
 அது வந்து.. எங்க வூட்டாண்ட  மேல ஷெல்புல இருந்த புக்ஸலாம் சுத்தம் செயுறப்ப, உள்ளே இருந்த காந்தி, நேரு ஃபோட்டோக்கள்  கீழ விழுதுடிச்சா.. நாதான் அந்த ரெண்டு ஃபோட்டோக்களை யும் என்னோட 'கையால எடுத்து'  புக்ஸ்ல திரும்ப வெச்சேன்.

2 )  நா எப்படி காரக் கண்டு பிடிச்சேனா ?
ரெண்டு நாளைக்கு முன்னாடி, என்னோட பையனோட வெளையாட்டு காரு காணாமப் போச்சுன்னு, அவன் ரொம்ப அழுதானா .. அத பாத்து.. தாங்க முடியாம... வீட்டையே புரட்டி போட்டு தேடினப்ப என்னால அந்த காரக் (தேடிக்) கண்டுபிடிக்க முடிஞ்சிச்சி....

டிஸ்கி : என்னங்க பண்ணுறது.. எனக்கு
http://ulagamahauthamar.blogspot.com/2010/09/blog-post_06.html
http://gokulathilsuriyan.blogspot.com/2010/09/blog-post_06.html
http://arunprasathgs.blogspot.com/2010/08/im-back.html
மாதிரி எல்லாம் எழுதத் தெரியாது.. அதான் இப்படி..

(இந்திய) ஆசிரியர் தினம் :


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளே அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிரியர் தினமாக கொண்டாடப் படுகிறது. ஒரு முறை அவரிடம் அவரது நண்பர்களும், மாணவர்களும், அவரது பிறந்தநாளை கொண்டாட அனுமதி அளிக்குமாறு கேட்டனராம். அதற்கு அவர், தனது பிறந்தநாளை, தனக்காக மட்டும் கொண்டாடாமல், அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிக்கும் வகையில் அதனை,  ஆசிரியர் தினமாக கொண்டாட விழைந்தாராம்.

இந்தியக் குடியரசின் இரண்டாவது 'துணை ஜனாதிபதி' மற்றும் இரண்டாவது 'ஜனாதிபதியாகவும்' (1962–1967) பதவி வகித்து நமது தேசத்திற்கு பெருமை சேர்த்தவர்.

"Dr. Radhakrishnan studied philosophy by chance rather than by choice. Being a financially constrained student at the time, when a cousin, after graduating from the same college, passed on his textbooks in philosophy to Radhakrishnan, it automatically decided his academic course.  Later on he felt deep interest in his subject and wrote many acclaimed works on philosophy, both eastern and western." Courtesy : http ://www .wikipedia .org

வாழ்க்கையில் பலருக்கு தான் விரும்பியது கிடைக்காமல் போகலாம்.. ஆனால் கிடைத்ததை வைத்துக்  கொண்டு நாம் நம்மை எவ்வாறு மேற்கொண்டு செல்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.  அவ்வாறு இருந்து வெற்றி கொடியை நாட்டிய இவரை நமது இளைய தலைமுறை மக்கள் ஒரு உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பிறந்து பெரும்பாலும் ஆந்திரத்தில் வளர்ந்தார். அவர் ஆந்திர பல்கலைக் கழகம் மற்றும், ஹிந்து பனாரஸ் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பொறுப்பு வகித்து கல்விபணி செய்துள்ளார்.

அன்னாருக்கும், கல்வி பயில்விக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நாளில், எனது மனமார்ந்த நன்றிகள். பின்வரும் பெருந்தகைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

எனது பள்ளி நாட்களில் என்னுடைய வகுப்பாசிரியர்களாக (class teacher) இருந்தவர்கள்..
ஆரம்பப் பள்ளி நாட்களில் - ஒன்னாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.. (முறையே ) : 
திருமதி. சரோஜா, திருமதி லிலி, திருமதி. மூகாம்பிகை, திரு நடராஜன், திரு. சுந்தர ராவ் (இவர் பள்ளித் தலைமையாசிரியராகவும் இருந்தவர்) 

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வரை (முறையே)  :
திரு. டாண்டன் , திரு. தியாகராஜன், திரு. வி.ஆர். பாலசுப்பிரமணியன், திரு. பி.ஆர். கணேசன், திரு. கிருஷ்ண மூர்த்தி, திரு. இளங்கோவன் (11th   & 12th) மற்றும் தலைமை ஆசிரியர்  ஆசிரியர் திரு. எஸ். சம்பத், துணை தலைமை ஆசிரியர் திரு. சிவராமன்.  உடற்கல்வி ஆசிரியர் திரு. ராமு, திரு. ராமதாஸ் (1 &  2) மற்றும் தமிழ், ஆங்கில ஆசிரியர்கள்... மற்றும் எனக்கு இயற்பியலில் ஆர்வம் வரக் காரணமாக இருந்த எனது +2 டியூஷன் ஆசிரியர் திரு. உலக நாதன் (அப்போது அவர் கல்லூரி விரிவுரையாளராக இருந்தவர்)

கல்லூரி நாட்களில் (இயற்பியல் துறை):
திரு. ஜி. பலவந்த ராவ்.  , திரு. ஜி. சிதம்பரம், திரு(Dr ). பிலோமிநாதன், திரு.ஆர். ராஜகோபாலன், திரு. எஸ். சுவாமிநாதன்., திரு.எஸ். ரங்கராஜன்., திரு ஜே. ஜேசுதாஸ். திருவாளர்கள் கிருஷ்ண மூர்த்தி  பி மற்றும் எம், திரு(Dr ). கலிய பெருமாள் (HOD ), திரு(Dr ). ஏ தாயுமானவன், திரு(Dr .) பி. நீலமேகம், திரு. எஸ். ஜெயராமன் ..
கணிதத் துறை  : திரு. எஸ். சுவாமிநாதன், திரு. ஆர். உதய குமார்,. ஜே. ஜெயக்குமார்.   மற்றும் சில - ஆங்கிலத் துறை, தமிழ்த் துறை, வேதியல் துறை ஆசிரியர்கள்.. (பெயர்கள் நினைவில் இல்லை)

மேலும் கல்லூரி முதவராக அப்போது இருந்த Dr. மெய்பொருள் (இவர் முதல்வராக இருந்ததாலோ அல்லது தமிழ் துறையை சார்ந்தவராக இருந்ததாலோ, எனக்கு இவர் பாடம் எடுக்காமலிருந்தாலும், இவருக்கு  பாடமெடுத்தவர் எனக்கு பத்தாம் வகுப்பில் ஆங்கில, கணிதம் டியூஷன் எடுத்தவரும், எனது சிறிய-தந்தையாருமான திரு. ஆர். ரங்கராஜன் அவர்கள் ஆவார். இவர் ஒய்வு பெரும்பொது அரசாங்க பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்தவர்.) 

என்னை கவர்ந்த, என்னை ஊக்குவித்த சில ஆசிரியர்களின் பெயர்கள் கீழே கொடுத்துள்ளேன் :

இயற்பியல் துறை திரு. (Dr .) பி. பிலோமிநாதன், மூன்றாவது ஆண்டு இளமறிவியல் வகுப்பில் முதன் முதலில் நுழைந்தவுடன் எங்களிடம் கேட்ட கேள்வி 'மாதவன் யாரு?" ('அலைபாயுதே' ஷூட்டிங், பாடல் பதிவு இதெல்லாம் நடப்பதற்கு பல ஆண்டுகள் முன்னால்..) ஆமாங்க.. என்னைத்தான்.. அவர் தெரிந்து கொள்ள இப்படி கேட்டார். ஏனென்றால், முதலாவது செமஸ்டரில், நான் 95 % எடுத்திருந்தேன். (முதன்மை பாடமான இயற்பியலில் 92 % மற்றும் இனப் பாடம் கணிதத்தில் 98 % ம் சேர்த்து). இதை எனது முதாலாவது செமஸ்டரிலேயே தெரிந்து கொண்டு, ஒன்றரை ஆண்டுகள் கழிந்தாலும் ஞாபகமாக என்னைப் பற்றி முதன் முதலிலேயே கேட்டது, எனக்கும் ஊக்கமாக இருந்தது. அன்றிலிருந்து நான் முதுகலை முடிக்கும் வரை எனக்கு நல்ல துணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்.

எனது குடும்பத்தில், ஆசிரியப் பனி செய்தவர்கள் :
எனது இரண்டு, சிறிய தந்தையர்கள் (Paternal Uncle), எனது இரண்டு அண்ணன்மார்கள் (ஒருவர் முழு நேர விரிவுரையாளர், மற்றவர் அறிவியல் ஆராய்ச்சியாளராகவும் அவர்களின் அலுவலக B .Tech courseல் பல வருடங்களில் ஆசிரியப் பணியிலும் ஈடுபட்டவர்). எனது அக்காவும், மன்னியும் (அண்ணி), சில வருடங்கள் நர்சரி வகுப்பில் ஆசிரியராக பணியாற்றியவர்கள்.

ஸ்ரீ ஜெயந்தி

'ஸ்ரீ' என்று லக்ஷ்மியை  குறிப்பிடுகிறோம். எனினும் 'ஸ்ரீஜெயந்தி' என்று 'கீதை' வழங்கிய 'ஸ்ரீ கண்ணன் / கிருஷ்ணன் / மாதவன் / மதுசூதனன்' பிறந்த நன்னாளை கொண்டாடுகிறோம். கண்ணனைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது எதுவுமில்லை.. பல பெரியோர்கள் பல விதமாக அவனின் குணாதிசயங்களை சொல்லி நமக்குத் தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.

இந்த நாளில் பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமிருந்து இரவு, அவன் வருகைக்கு காத்திருந்து.. அவனுக்கு பூஜைகள் செய்து, உணவு அருந்தி விரத்தத்தை பூர்த்தி செய்வது எங்களது வழக்கம். நமது முன்னோர்கள் அவ்வாறு வழக்கம் செய்து வைத்ததை கேள்வி கேட்காமல் தொடர்வது கூட என்னை பொறுத்த வரையில் நல்ல செயலாகும். அவ்வாறு செய்வதனால் ஏதாவது கஷ்டம் வருமாயின் (உ.தா. அல்சர், அசிடிட்டி உள்ளவர்கள்) விரதமிருபதை தவிர்ப்பது சரிதான். எந்த விதத்திலும் கஷ்டமில்லையானால், முன்னோர்கள் சொல் வழி செல்வது, மனதிற்கு மகிழ்வையும், புத்துணர்வையும் தருகிறது. இல்லத்தினை நன்கு தண்ணீரால் அலம்பி, துடைத்து, கோலமிட்டு, கண்ணன் வருவதற்கு வாசலிலிருந்து பூஜை அறை வரை அவனது பிஞ்சு பாதத்தினை பச்சை அரிசி மாவினால் மாக்கோலமிடுவார்கள் வீட்டிலுள்ள பெண்கள். படத்திலுள்ள கால்கள், நான் வரைந்தது (மூன்று வருடங்களுக்கு முன்னர்).  சிலர் எட்டு போட்டும், சிலர் மாவு-நீரில் கைகளை முடிக்கொண்டு தோய்த்து தரையில் குத்து விட்டு கால்களின் அச்சுகளை உருவாக்கியும்,  அதன் மேல் 5 புள்ளிகள் வைப்பார்கள்.
சின்ன வயதில், விரதமிருக்காமல் இருந்தாலும், மாலை பூஜை எப்போது முடியும் எனக் காத்திருந்து.. அதன் பின்னர் கிடைக்கும் பலகார, பழ வகைகளை ஒரு கை பார்க்கும் சுகம் சொல்லி மாளாது. எங்கள் இல்லத்தில், வடை, பாயாசம், முறுக்கு, சீடை (உப்பு, வெல்லம்), அதிரசம், அப்பம், சுழியம்(ஆகார வகைகள்), நீர்மோர், பானகம் (நீர்வகை), ஆப்பிள், நாவல், பேரிகை, கொய்யா (பழ வகைகள்), புளியம்-பிஞ்சு  ஆஹா.. ஆஹா.. எங்கள் அன்னையாரால் இத்தனை வகைகளை எப்படி செய்ய முடிகிறது.. இன்றைய தலைமுறை(நான் உள்பட) மக்களால் அன்றாட வேலைகள் கூட சுமையாக இருப்பதாகத் தோன்றுகிறது.  அட மறந்துட்டேனே.. 'சர்க்கரை தூவிய சூப்பர் வொயிட் வெண்ணை' கூட உண்டு. இதெல்லாம் முதல் நாள் கொண்டாட்டங்கள்.

 இரண்டாம் நாள் எங்கள் ஊரிருள்ள கோவிலில் 'உரியடி, வழுக்குமர' உத்சவங்கள் நடைபெறும். பார்க்க வேடிக்கை தான். 'உரியடி' ஒரு ஜுஜுபி வேலைதான்.. ஆனால் 'வழுக்குமரம்' சற்று ஆபத்தான சமாச்சாரம். அப்போது  தெரியவில்லை..  இப்போது நினைத்தால்.. ..  வழுக்கு மரத்தில் கவனமாக ஏறவேண்டும். எனக்கு ஒரு கஷ்டமு மில்லை.. நான் பார்வையாளன் தானே..

இவ்வாறே 'கண்ணன்' பிறந்த நாளை கொண்டாடி, இவ்வுலகில் எல்லோரும் துன்பத்திலிருந்து விடு பட்டு இன்பத்தில் திளைக்க அவனை வேண்டுவோம்.'ஸ்ரீஜெயந்தி' - இதில் 'ஸ்ரீ' என்பது யாரைக் குறிக்கிறது ?

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.  பின்குறிப்பு : நேற்று இரவு 8 மணிக்கு 'சிரிப்பொலி' தொலைக்காட்சியில் 'கண்ணனின் லீலைகள்' திரைப்படம் காண்பித்தார்கள்....  இன்றைய சராசரி திரைப்படத்தினை பார்க்கும் கண்களுக்கு, அந்த படம் மிக மிக நன்றாகவும், பொழுதுபோக்காகவும் இருந்தது.  (ஆனால் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு இடையில் வந்த பிரேக் கஷ்டமாகத்தான் இருந்தது).