சிலேடை - பூமியும் தேரும் -- (#மாதவன்_சிலேடை 4)

நேரிசை வெண்பா : (28-07-2017) சென்ற வார, ஆடிப்பூர தேர்த்திருவிழா கண்டதன் விளைவு இப்பாடல்.
சிலேடை - பூமியும் தேரும்  -- (#மாதவன்_சிலேடை 4)
******************************

பைய நகர்ந்து, பருவமோர் வட்டமிட்டு,
மெய்யிலே மேடுகாட்டி, வெம்மையுடை - ஐயனை
மையமாக்கி, யென்றும் மறுபாதை செல்லாத,
வையம், வடத்தேராய் வந்து
******************************

* பருவம் -- தொடர்ந்து சுழற்சியாக நடக்கும் செயல் -- இவ்விடத்தில் ஆண்டு/வருடம்.
* "மேடு" ==  பூமியுள்ள மலை, தேரின் உடற்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளச் சிலை (பொம்மை)
* "வெம்மையுடை(ய) ஐயன்" -- வெப்பம் பொருந்திய சூரியன், பராக்கிரமம்(வெம்மை) பொருந்திய தெய்வம்

ஆடிப்பூர தேர்த்திருவிழா - அந்தாதி 29-07-2017


இராஜமன்னார்குடி ஆடிப்பூர தேர்த்திருவிழா கண்டருளும் வேளையில் , ஸ்ரீ. செங்கமலத்தார் சமேத ஸ்ரீவித்யா இராஜகோபாலன் திவ்ய தம்பதிகளுக்கு இப்'பா'மாலை சமர்ப்பணம் : (2017)
**********************
காப்புச் செய்யுள் :

சங்கொடு சக்கரத் தண்ட முடைவாளுந்
தங்கையில் வில்லும் தரித்துத்தன் - மங்கையாம்
செங்கமலத் தோடுச் சிறப்பாய்க் குடிகொண்ட
புங்கைமர நந்தனைப் போற்று !              (லாபம்)
****************************

ஆடியிலெம் மன்னையில் ஐயிரண்டு நாட்களிலும்
ஓடிவந்து காண்போமே ஓரன்னை - பாடியாடித்
தேடிவரு வோர்காணுஞ் செங்கமலத் தாயவளை
நாடிவர, நல்குவாள் நன்று.  (1அ )

நன்றான வேளையில் நாம்வணங்க ஏதுவாய்
இன்றும், அரிமா வெழுகொடி சென்றுவந்து
ஓங்கிய கம்பி லுயரவே மன்னையன்னை
பாங்கொடு செல்வதைப் பார். (1ஆ)
****************************
செல்வதைப் பார்த்திடச் சேர்ந்திடுமே உள்ளபயன்;
சொல்லால் துதித்திடத் தோன்றிடுமே - நல்லபயன்;
அல்லவை நீக்கிடவே அன்னத்தில் அன்னைவர       ^
இல்லையொரு துன்பமு(ம்) இங்கு !  (2)
****************************
துன்பமிங் கில்லை, துயரமும் இங்கில்லை;
இன்பங் கிடைக்குமே இவ்வெழில் - மன்னையில் ;
நன்னெறியால் நம்மவளை நாகத்திலே நாம்காண,
நன்மை நடக்கும் நமக்கு !   (3)
****************************
நடக்கும் நமக்கு நலமாய் எதுவும்;
தடங்கல் அகன்று தழைக்கும் - இடமாம்;
பதமாய்ப் பலரும் பணியும் பணிவால்  
இதமாய் வருவாள் இணைந்து   (4அ )

வருவாள் இணைந்து வனவேந்தன் ஏந்த,
பெருமாள் உடன்சேர் பெரிதாய்க் கருடன்
சரியாய்ப் பொருந்தும் சமயம் அமையப்
பிரியமாய் கண்டேன் பிறந்து !  (4 ஆ)
****************************
கண்டேன் பிறந்து, கமலமலர் மேலொரு,
பெண்குலம் போற்றும் பெரியவளை - மண்ணிலோர்
வண்ணமாய், வானுயர் மன்னையில், மன்னவன்
கண்ணன் துணையினைக் காண் ! (5)
****************************
துணையினைக் கண்டால் துயரம் விலகும்,
இணைக்கும் அருளால், இறுக்கும் - அணைப்பால்:
இணையிலாச் சேவகன் இலங்கையிற் கண்ட
கணையாழித் திருமகளைக் காண் !  (6அ)

திருமகளைக் காணலாம், தேர்ந்த பெரியோர்
ஒருங்கே மறைநான்கும் ஓதுந் -  தெருவினில்
ஆர்வமாய் வெண்ணிற ஐராவ தந்தாங்க
ஊர்வலம் செல்வாளே ஊர்ந்து   (6ஆ)
****************************
செல்வாளே ஊர்ந்து, செழுமைசேர் மன்னையில்,
நெல்லின் மணிகள் நிலைத்திட - எல்லிபோகு
மாலைவெயில் வீச, மரக்கால் அளக்கும் 
வேலையை நாடிநீ வேண்டு     (7)

# எல்லி-போகு  = கதிரவன்+போகும் (மறையும் வேளை)
**********************************
நாடிநாம் வேண்டலாம்; நற்கதி தேடலாம்;
தேடினால் வந்திடும்; சேர்ந்துநாம் - ஆடியில்    
கூடினால், ஓடுங் குதிரையில் காணலாம்
ஓடிவா, சேவையிங் குண்டு !  (8)  
******************************
சேவையிங் குண்டு, தினமது கண்டுயாம்,
பாவையைப் போற்றிப் பணிந்துருகிக் - கோதையாய்
வந்திருக்குங் கோமகளை வண்ணமயத் தேரிலே
இந்நாளில் கண்டோம் இனிது   (9)
*******************************
கண்டோம் இனிது; கலந்தோம் ஒன்றென
உண்டோ இதுபோல், உலகிலே? - மண்ணிலே
மாமணம் வீசும், மலர்சூழ்ந்த பல்லக்கில்
மாமகளைக் கண்டு மயங்கு !   (10 அ)

கண்டு மயங்கிக் கவிதை படித்தேனே !
வண்டு வராவதி மன்னையிற் - உண்டு
உறங்கிப் பணிந்தேனே! உன்னை உணரப்
பிறந்தேனே, ஆடியில் யான் !  (10 ஆ)
******************************


^ அல்லலின்றி அன்னத்தில் அன்னை அமர்ந்திட -- என்றும் வரலாம்.

ஸ்ரீ செண்டும்  கையும் ஸ்ரீ செங்கமலாத் தாயார் துணை :