மொக்கை(ராசா) மூக்கு - செல்வா'ஸ் ஸ்பெஷல்

மொக்கை மூக்கு
நண்பர் செல்வா ஒரு முறை தீராத சளித் தொந்தரவினால் அவதிப்பட்டபோது அவரை சந்திக்க நேர்ந்தது. நான் அவரிடம், 'சளி' -  மூக்கு, தொண்டை சம்பந்தப் பட்டது, நீங்கள் இ.என்.டி (ENT ) மருத்துவரிடம் சென்று மருத்துவ உதவி பெறுங்கள் எனச் சொன்னேன்.

இ.என்.டி (ENT ).. ஓஹோ.. 'N' -என்பது 'நோஸ்' மூக்கையும், 'T ' என்பது 'த்ரோட்' தொண்டையையும்.. குறிக்கிறது.. அப்ப 'E' என்பது கண்களைதானே குறிக்கிறது என்றார். நான் அவரிடம் 'E ' என்பது , 'Ear ', காதினைக் குறிப்பதாகச் சொன்னேன்.  அவர் ஒப்புக்கொள்ள வில்லை. மூக்கிற்குப் பக்கத்தில் கண்கள்தான் இருக்குறது. காது சற்று தொலைவில் உள்ளது. எனவே 'ENT ' மருத்துவர் 'கண், மூக்கு, தொண்டை' மருத்துவ நிபுணர்தான் என்று அடித்துப் (!) பேசினார். அவரை சமாதானம் செய்து.. மருத்தவரை அணுகி முதலில் மருத்துவ உதவி பெறுமாறும்.. பின்னர் இது பற்றி பேசி ஒரு முடிவிற்கு வரலாம் என்றேன்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் நண்பர் செல்வாவை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றேன்.. அவர் தற்போது சளித் தொல்லையிலிருந்து சற்று நிவாரணம் பெற்றிருப்பதாகவும் சொன்னார். நான் மெதுவாக ENT என்பதில் வரும் 'E ' என்பது காதினை குறிப்பதாகும் என ஆரம்பித்த உடனேயே, என்னை நிறுத்தி அவர் சொன்ன தகவல் இருக்கிறதே.. ..   ம்ம்.. எல்லாம் என்னோட நேரம்.. இப்படிலாம் ஒரு ஆள் எனக்கு நண்பனா கிடைத்ததை நினைத்து நினைத்து..   நோ.. நோ.. நா ரோம்ப பாவம்..  இதுக்கு மேல வேணாம்..  வேணவே வேணாம்.. 

அவரு என்ன சொன்னாரா... ?

செல்வா : இங்கப் பாருங்க.. ENT டாக்டர் ப்ரிஸ்க்ரைப் பண்ண  மருந்துல இதுவும் ஒண்ணு.. இதோட பேரு 'நாஸிவிஷன்'. 'நாஸி'ன்னா  மூக்கு.. 'விஷன்'ன்னா  பார்வை.. அதாவது கண்ணுக்கும் மூக்கும் இருக்குற சம்பந்தத்த நா, இதுக்கு மேல உங்களுக்கு விளக்கணுமா என்ன ?

P.S.V(பக்கத்திலிருந்த எங்கள் இன்னொரு நண்பர் செல்வாவிடம் ) :  "நல்லா பாருங்க செல்வா , அது நாசிவியான். நாசிவிஷன் அல்ல"

செல்வா :  "போங்க சார், கம்பெனி காரங்க,  ஸ்பெல்லிங் தப்பா எழுதியிருக்காங்க. அவங்களுக்கு தான் நீங்க அட்வைஸ் பண்ணனும்" என்றாரே பார்க்கலாம், எனக்கு காது கேட்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.


டிஸ்கி : நன்றி  பி.எஸ்.வி.

============================


கதம்பமாலை ( Mixed Garland / Evening)

இப்படியும் அலுவலகர்கள் இருக்கிறார்கள் :
சென்ற மாதம் எனது பிராட் பேன்ட் பில்லில் நான் எதிர்பாரா வண்ணம், அதிகத் தொகை வந்தது. எனக்கு ஆச்சரியம்.. பிப்ரவரி மாதம் 28 நாட்கள் மட்டுமே.. அதிலும் நான் நான்கு நாட்கள் வீட்டில் இல்லை. மேலும், நான் எனது போன்-கால்கள் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளை அடிக்கடி அப்டட் செய்பவன். அதனாலேயே இந்த பில்லில் ஏதோ குறைபாடு இருப்பதாக எனக்குத் தோன்றியது. போன் செய்து கேட்டேன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில். அவர்களும் இந்த முறை எனது பில்லில் ஏதோ தவறு நேர்ந்து விட்டதாகவும்.. ஓரிரு நாட்களில் சரி செய்து விட்டு எனக்குத் தகவல் தருவதாகவும் சொன்னார். 

சொன்னதோடு இருக்காமல், அதனை சரி செய்தவுடன் வீட்டிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்கள். இப்படியும் அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றியும். 




ரயில்வேத் துறையின் செயல்பாடுகள் (முன்பதிவு அலுவலகம்) :
நான் மூன்று-நான்கு வருடங்களாக, ரயில் பயணங்களுக்கு ஆன்-லயனில் முன் பதிவு செய்து வருகிறேன். கூட்டம் குழப்ப மில்லாமல், வீட்டிலிருந்த படியே முபதிவு செய்வது வசதிதான். இருந்தாலும்..  நேரடியாக ஒரே ரயில் இல்லாத இரண்டு இடங்களுக்கிடையே, ஒரு ரயில் பிடித்து  இடைப்பட்ட ஊர் வரை சென்று அங்கிருந்து மற்றொரு ரயில் பிடித்து செல்வதற்கு ஒரே டிக்கெட்- தொலைநோக்கு கட்டணமுறை ( telescopic fare ) பெறுவது இயலாததால் முன்பதிவு நிலையத்திற்கு சென்றேன்.

முன்பெல்லாம் முன்பதிவு மையத்திற்கு சென்றால், எட்டு வரிசை இருந்தால்.. நாம் எதில் சேருகிறோமோ அது மிகவும் மெதுவாக முன்னேறும்.. (மர்பி விதி). நமக்கும் பின்னால் வந்தவர்கள் வேறு வரிசையில் சேர்ந்து நமக்கு முன்னரே முன்பதிவு செய்து விட்டு செல்வதை நம்மில் பலரும் அனுபவித்திருக்கலாம். இதைத்தான் நேரம் என்று நினைத்து நம்மையே நாம் தேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால்..

இப்போது அங்கு வரிசை முறை சிறப்பானதாக இருக்கிறது. கால் வலிக்க நிற்க வேண்டிய அவசியமில்லை. முதலில் விண்ணப் படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து ஒரு கவுண்ட்டரில் வரிசை(டோக்கன் முறை) எண் பெறவேண்டும். பின்னர் இருக்கும் நாற்காலியில் (இடம் கிடைத்தால்) அமர்ந்திருக்கலாம். இருக்கும் எல்லா கவுண்டர்களிலும் தற்போதைய மூன்று எண்கள் டிஸ்ப்ளே செய்த படியே இருக்கும், அதனோடு ஒவ்வொரு கவுண்ட்டரில் வரிசை எண் மாறும் பொது, அறிவிப்பும் செய்யப்படும். குளிரூட்டப் பட்டுள்ள அறையில் நிம்மதியாக ஓய்வெடுத்த படியே நமது முறை வரும் வரையில் இருக்கலாம்.  அதே அறையின் பக்கத்திலேயே சிற்றுண்டி / காபியும் காசு கொடுத்து வரலாம். பக்கத்திலேய பே அண்ட் யூஸ் குளியல் மற்றும் கழிவறைகளும் இருக்கிறது. நேரமானாலும் அளுப்பு தோன்றவில்லை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்பது இந்த முறையில் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. இதனை செயல் படுத்தும் நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும்.

இன்றைய இந்திய வெஸ்ட்-இண்டீஸ் ஆட்டம் :
வழக்கம் போல பேட்டிங் பவர் பிளேயில்  இந்திய அணி சோபிக்கவில்லை. 1990களில் டெண்டுல்கர் மட்டுமே அடித்து ஓட்டங்கள் சேர்த்த நிலை மாறி மேலும் இரண்டு மூன்று நல்ல ஆட்டக்காரர்கள் கிடைத்தாலும், இந்த உலகக் கோப்பையில் இதுவரை முதல் மூன்று நான்கு ஆட்டக்காரர்களைத் தவிர மற்றவர்கள் சொதப்புவதை பார்க்கையில் இந்தியா அடுத்த நிலை ஆட்டங்களில் வெற்றி பெறுமா என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. சரியான பவுலர்கள் இல்லை...

தோனியின் கணிப்புகள் சரியாக பயனளிக்க மறுக்கிறதோ ? இன்றைய ஆட்டத்தில் யுவராஜ் செஞ்சுரி அடித்திருக்கிறார்....  என்ன செய்ய ? இந்திய அணியின் வெற்றி திறமையைவிட அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கிறதோ ?

ஒரு வேளை, இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தால் காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட வேண்டுமென்ற பயத்தில், இந்திய அணி தோற்க முயலுகிறதோ ?

ஒரு ஆறுதல்.. அம்பயர் அவுட் கொடுக்காவிட்டாலும், டெண்டுல்கர் அவுட் என அவராகவே வெளியேறியது, பாராட்டுதலுக்குரியது.
=====================================