சிலேடை - பூமியும் தேரும் -- (#மாதவன்_சிலேடை 4)

நேரிசை வெண்பா : (28-07-2017) சென்ற வார, ஆடிப்பூர தேர்த்திருவிழா கண்டதன் விளைவு இப்பாடல்.
சிலேடை - பூமியும் தேரும்  -- (#மாதவன்_சிலேடை 4)
******************************

பைய நகர்ந்து, பருவமோர் வட்டமிட்டு,
மெய்யிலே மேடுகாட்டி, வெம்மையுடை - ஐயனை
மையமாக்கி, யென்றும் மறுபாதை செல்லாத,
வையம், வடத்தேராய் வந்து
******************************

* பருவம் -- தொடர்ந்து சுழற்சியாக நடக்கும் செயல் -- இவ்விடத்தில் ஆண்டு/வருடம்.
* "மேடு" ==  பூமியுள்ள மலை, தேரின் உடற்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளச் சிலை (பொம்மை)
* "வெம்மையுடை(ய) ஐயன்" -- வெப்பம் பொருந்திய சூரியன், பராக்கிரமம்(வெம்மை) பொருந்திய தெய்வம்

ஆடிப்பூர தேர்த்திருவிழா - அந்தாதி 29-07-2017


இராஜமன்னார்குடி ஆடிப்பூர தேர்த்திருவிழா கண்டருளும் வேளையில் , ஸ்ரீ. செங்கமலத்தார் சமேத ஸ்ரீவித்யா இராஜகோபாலன் திவ்ய தம்பதிகளுக்கு இப்'பா'மாலை சமர்ப்பணம் : (2017)
**********************
காப்புச் செய்யுள் :

சங்கொடு சக்கரத் தண்ட முடைவாளுந்
தங்கையில் வில்லும் தரித்துத்தன் - மங்கையாம்
செங்கமலத் தோடுச் சிறப்பாய்க் குடிகொண்ட
புங்கைமர நந்தனைப் போற்று !              (லாபம்)
****************************

ஆடியிலெம் மன்னையில் ஐயிரண்டு நாட்களிலும்
ஓடிவந்து காண்போமே ஓரன்னை - பாடியாடித்
தேடிவரு வோர்காணுஞ் செங்கமலத் தாயவளை
நாடிவர, நல்குவாள் நன்று.  (1அ )

நன்றான வேளையில் நாம்வணங்க ஏதுவாய்
இன்றும், அரிமா வெழுகொடி சென்றுவந்து
ஓங்கிய கம்பி லுயரவே மன்னையன்னை
பாங்கொடு செல்வதைப் பார். (1ஆ)
****************************
செல்வதைப் பார்த்திடச் சேர்ந்திடுமே உள்ளபயன்;
சொல்லால் துதித்திடத் தோன்றிடுமே - நல்லபயன்;
அல்லவை நீக்கிடவே அன்னத்தில் அன்னைவர       ^
இல்லையொரு துன்பமு(ம்) இங்கு !  (2)
****************************
துன்பமிங் கில்லை, துயரமும் இங்கில்லை;
இன்பங் கிடைக்குமே இவ்வெழில் - மன்னையில் ;
நன்னெறியால் நம்மவளை நாகத்திலே நாம்காண,
நன்மை நடக்கும் நமக்கு !   (3)
****************************
நடக்கும் நமக்கு நலமாய் எதுவும்;
தடங்கல் அகன்று தழைக்கும் - இடமாம்;
பதமாய்ப் பலரும் பணியும் பணிவால்  
இதமாய் வருவாள் இணைந்து   (4அ )

வருவாள் இணைந்து வனவேந்தன் ஏந்த,
பெருமாள் உடன்சேர் பெரிதாய்க் கருடன்
சரியாய்ப் பொருந்தும் சமயம் அமையப்
பிரியமாய் கண்டேன் பிறந்து !  (4 ஆ)
****************************
கண்டேன் பிறந்து, கமலமலர் மேலொரு,
பெண்குலம் போற்றும் பெரியவளை - மண்ணிலோர்
வண்ணமாய், வானுயர் மன்னையில், மன்னவன்
கண்ணன் துணையினைக் காண் ! (5)
****************************
துணையினைக் கண்டால் துயரம் விலகும்,
இணைக்கும் அருளால், இறுக்கும் - அணைப்பால்:
இணையிலாச் சேவகன் இலங்கையிற் கண்ட
கணையாழித் திருமகளைக் காண் !  (6அ)

திருமகளைக் காணலாம், தேர்ந்த பெரியோர்
ஒருங்கே மறைநான்கும் ஓதுந் -  தெருவினில்
ஆர்வமாய் வெண்ணிற ஐராவ தந்தாங்க
ஊர்வலம் செல்வாளே ஊர்ந்து   (6ஆ)
****************************
செல்வாளே ஊர்ந்து, செழுமைசேர் மன்னையில்,
நெல்லின் மணிகள் நிலைத்திட - எல்லிபோகு
மாலைவெயில் வீச, மரக்கால் அளக்கும் 
வேலையை நாடிநீ வேண்டு     (7)

# எல்லி-போகு  = கதிரவன்+போகும் (மறையும் வேளை)
**********************************
நாடிநாம் வேண்டலாம்; நற்கதி தேடலாம்;
தேடினால் வந்திடும்; சேர்ந்துநாம் - ஆடியில்    
கூடினால், ஓடுங் குதிரையில் காணலாம்
ஓடிவா, சேவையிங் குண்டு !  (8)  
******************************
சேவையிங் குண்டு, தினமது கண்டுயாம்,
பாவையைப் போற்றிப் பணிந்துருகிக் - கோதையாய்
வந்திருக்குங் கோமகளை வண்ணமயத் தேரிலே
இந்நாளில் கண்டோம் இனிது   (9)
*******************************
கண்டோம் இனிது; கலந்தோம் ஒன்றென
உண்டோ இதுபோல், உலகிலே? - மண்ணிலே
மாமணம் வீசும், மலர்சூழ்ந்த பல்லக்கில்
மாமகளைக் கண்டு மயங்கு !   (10 அ)

கண்டு மயங்கிக் கவிதை படித்தேனே !
வண்டு வராவதி மன்னையிற் - உண்டு
உறங்கிப் பணிந்தேனே! உன்னை உணரப்
பிறந்தேனே, ஆடியில் யான் !  (10 ஆ)
******************************


^ அல்லலின்றி அன்னத்தில் அன்னை அமர்ந்திட -- என்றும் வரலாம்.

ஸ்ரீ செண்டும்  கையும் ஸ்ரீ செங்கமலாத் தாயார் துணை :

ஆடித்திருவிழா 10ம் திருநாள் : சப்தாவர்ணம் 28-07-2017

ஆடிப்பூர,  உத்சவம் :
நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..

**********************
கண்டோம் இனிதாய்க் கலந்தோம் ஒன்றென,
உண்டோ இதுபோல், உலகிலே? - மண்ணிலே
மாமணம் வீசும், மலர்சூழ்ந்த பல்லக்கில்
மாமகளைக் கண்டு மயங்கு !   (10 அ)

கண்டு மயங்கிக் கவிதை படித்தேனே !
வண்டு வராவதி மன்னையிற் - உண்டு
உறங்கிப் பணிந்தேனே! உன்னை உணரப்
பிறந்தேனே, ஆடியில் யான் !  (10 ஆ)
************************** 

தாயார் புஷ்பப்பல்லக்கு மன்னார்குடி

புகைப்பட உதவி ஸ்ரீ. ஹரிசரண் நாராயணன்

ஆடித்திருவிழா 9ம் திருநாள் : திருத்தேர் -- 27-07-2017

ஆடிப்பூர, திருத்தேர் உத்சவம் :: ஆடித்திருவிழா 9ம்
நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
*********************
சேவையிங் குண்டு, தினமது கண்டுயாம்,
பாவையைப் போற்றிப் பணிந்துருகிக் - கோதையாய்
வந்திருக்குங் கோமகளை, வண்ணமயத் தேரிலே
இந்நாளில் கண்டோம் இனிது   (9)
*********************
புகைப்பட உதவி : விஜய் ராம் (முகப்புத்தகம்)

ஆடித்திருவிழா 8ம் திருநாள் - 26-07-2017 (posted on 27-07-2017)


நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
குதிரை வாகனத்தில், ஸ்ரீ. செங்கமலத் தாயார் சேவை :
**********************
நாடிநாம் வேண்டலாம்; நற்கதி தேடலாம்;
தேடினால் வந்திடும்; சேர்ந்துநாம் - ஆடியில்    
கூடினால், ஓடுங் குதிரையில் காணலாம்
ஓடிவா, சேவையிங் குண்டு !  (8)
**********************


ஆடித்திருவிழா ஏழாம் திருநாள் - 25-07-2017

நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..

*7ம் திருநாள், நெல் அளத்தல்*  :
**************************************
செல்வாளே ஊர்ந்து, செழுமைசேர் மன்னையில்,
நெல்லின் மணிகள் நிலைத்திட - எல்லிபோகு
மாலைவெயில் வீச, மரக்கால் அளக்கும் 
வேலையை நாடிநீ வேண்டு     (7)
**************************************

#கோவிலில் நெல்அளத்தல் சிறப்பு, இன்று.
# எல்லி-போகு  = கதிரவன்+போகும் (மறையும் வேளை)

புகைப்பட உதவி : ரங்கராஜன் ராஜகோபாலன்



ஆடித்திருவிழா ஆறாம் நாள் - 24-07-2017

நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..

*யானை வாகனம்*  :
*********************************************

துணையினைக் கண்டால் துயரம் விலகும்,
இணைக்கும் அருளால், இறுக்கும் - அணைப்பால்:
இணையிலாச் சேவகன் இலங்கையிற் கண்ட
கணையாழித் திருமகளைக் காண் !  (6அ)

திருமகளைக் காணலாம், தேர்ந்த பெரியோர்
ஒருங்கே மறைநான்கும் ஓதுந் -  தெருவினில்
ஆர்வமாய் வெண்ணிற ஐராவ தந்தாங்க
ஊர்வலம் செல்வாளே ஊர்ந்து   (6ஆ)


பட உதவி : @விக்கிவிக்கி முகப்புத்தகம்
********************************************

ஆடித்திருவிழா ஐந்தாம் நாள் - 23-07-2017

நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..

கண்டேன் பிறந்து, கமலமலர் மேலொரு,
பெண்குலம் போற்றும் பெரியவளை - மண்ணிலோர்
வண்ணமாய், வானுயர் மன்னையில், மன்னவன்
கண்ணன் துணையினைக் காண் ! (5)




ஆடித்திருவிழா நான்காம் நாள் - 22-07-2017

 நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
*********************
நடக்கும் நமக்கு நலமாய் எதுவும்;
தடங்கல் அகன்று தழைக்கும் - இடமாம்;
பதமாய்ப் பலரும் பணியும் பணிவால்    
இதமாய் வருவாள் இணைந்து   (4அ )




                                           
வருவாள் இணைந்து வனவேந்தன் ஏந்த,
பெருமாள் உடன்சேர் பெரிதாய்க் கருடன்
சரியாய்ப் பொருந்தும் சமயம் அமையப்
பிரியமாய் கண்டேன் பிறந்து !  (4 ஆ)

(பிரியமாய் கண்டேன் பிறந்து ! இதுபோன்ற ஒரு நன்னாளில், பிறந்தேன்...  பிறந்து இறைவனின் அன்பினை(பிரியத்தை) கண்டேன். )
*******************************






ஆடித்திருவிழா மூன்றாம் நாள் - 21-07-2017

ஐந்துதலை நாகத்தில் அமர்ந்து வருதல் : 21-07-2017 (இராஜமன்னார்குடி)




நேரிசை வெண்பா (நேற்றைய பாடலோடு, அந்தாதியாய்த் தொடர்கிறது)

துன்பமிங் கில்லை, துயரமும் இங்கில்லை;
இன்பங் கிடைக்குமே இவ்வெழில் - மன்னையில் ;
நன்னெறியால் நம்மவளை நாகத்திலே நாம்காண,
நன்மை நடக்கும் நமக்கு !   (3)
 

ஆடித்திருவிழா இரண்டாம் நாள் - 20-07-2017

ஆடிப்பெருவிழா, மன்னார்குடி ஸ்ரீ. செங்கமலாத் தாயார்
ஹெவிளம்பி ளு, ; ஆங்கில மாதம் ஜூலை 2017.
 
2ம் நாள் :  20-07-2017
அன்னப் பறவை மீது அமர்ந்து வீதியுலா : நேரிசை வெண்பா.
(நேற்றைய பாடலோடு இது அந்தாதியாய்ச் சேரும்)

செல்வதைப் பார்த்திடச் சேர்ந்திடுமே உள்ளபயன்;
சொல்லால் துதித்திடத் தோன்றிடுமே - நல்லபயன்;
அல்லலின்றி அன்னத்தில் அன்னை அமர்ந்திட, 
இல்லையொரு துன்பமு(ம்) இங்கு !



# மூன்றாமடி 'அல்லவை நீக்கிடவே அன்னத்தில் அன்னைவர' எனவும் இருக்கலாம்.

ஆடிப்பெருவிழா 2017 - முதல் நாள், 19-07-2017

ஆடிப்பெருவிழா, மன்னார்குடி ஸ்ரீ. செங்கமலாத் தாயார் உத்சவம்
ஹெவிளம்பி ளு, ; ஆங்கில மாதம் ஜூலை 2017.
முதல் நாள் -- அந்தாதி வெண்பா
(காலை, மாலை)
ஆடியிலெம் மன்னையில் ஐயிரண்டு நாட்களிலும்
ஓடிவந்து காண்போமே ஓரன்னை - பாடியாடித்
தேடிவரு வோர்காணுஞ் செங்கமலத் தாயவளை
நாடிவர, நல்குவாள் நன்று.


நன்றான வேளையில் நாம்வணங்க ஏதுவாய்
இன்றும், அரிமா வெழுகொடி சென்றுவந்து
ஓங்கிய கம்பி லுயரவே மன்னையன்னை
பாங்கொடு செல்வதைப் பார்.
புகைப்பட உதவி : Vicky Vicky, Facebook.

சிலேடைக் குறள் வெண்பா


குறள்  வெண்பாவின் இலக்கணப்படி அமைந்தது..
ஈரடியாய், அடிக்கோர் பொழிப்பு மோனையமைந்தும், நாற்சீர், முச்சீராய் அமைந்தது.





********
உண்ணுமுண வாய்த்துள்ளி, ஊன்தாங்கு புள்ளிகளால்
கண்ணுவமை மீன்மானே, காண்

(1) உண்ணுமுன வாய் -- பிற உயிர்களுக்கு உணவாதலால்
(2) துள்ளி  --  துள்ளி குதித்து அங்குமிங்கு ஓடுவதால்
(3) ஊன்தாங்கு புள்ளிகளால் -- உடல் மீதமைத்த புள்ளிகளால்..
(4) கண்ணுவமை ::  அழகிய கண்ணிற்கு உவமையாகச் சொல்வதானால்...
'மீன்', 'மான்' போன்று இருப்பதை காண்பாயோ !
********

வலைத்தளம்-வான்புறா (சிலேடை)

சிலேடை : புறாவும், வலைத்தளமும் (நேரிசை வெண்பா)

விண்ணில் பறக்கும்; விடுசொல் தொலைசேர்க்கும்
மண்ணில் மனிதருக்கு மாமகிழ்ச்சி யூட்டும்;
விலைகொடுத்துச் செய்த வேலைகளு முண்டாம் ;
வலைதளம் வான்புறாவாய் வந்து !


(1) விடுசொல் தொலைசேர்க்கும்  : நாம் விடுக்கும் சொல்லை தொலைவான இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும்.
(2) விலைகொடுத்துச் செய்த வேலைகளு முண்டாம் :
        (a) வலைத்தளம் : கட்டுமானப் பணிகளால் ஆனது.
        (b) புறா  : தனது உழைப்பை விலையாகக் கொடுத்து வேலை செய்து கூடு கட்டும். 

நிலவும் செருப்பும் :நேரிசை வெண்பா (சிலேடை )


உடன்சேர்ந்து வந்திடுமே, உள்ளங்கால் தொட்டும்;
நடவாசல் சேர்ந்திடினும், நாடா - விடங்காண் ;
உயர்வாய் மழலைகா ணோவியமுங் கொண்டச்
செயலில் நிலவாஞ் செருப்பு !

செருப்பு :
(1) உடன்சேர்ந்து வந்திடுமே : அணிந்து செல்லச் செல்ல நம்முடன் சேர்ந்துவரும்.
(2) உள்ளங்கால் தொட்டும் : உள்ளங்கால் கீழ், தொடுமாரு அணியப்படும்.
(3) நடவாசல் சேர்த்திடினும், நாடா - விடங்காண் ; நடக்கும் வாசற்படி வரை வந்தாலும்... வீட்டினுள் / கோவிலினுள் செல்லாது... கண்டாயோ !
(4) உயர்வாய்த் தெரியு மோவியமுங் கொண்ட : உயர்வான / போற்றக்கூடிய ஓவியம் தன மீது வரையப்பட்டிருக்கும்.(குழந்தைகள் செருப்பு)

நிலவு :
(1) உடன்சேர்ந்து வந்திடுமே : நடந்து / ஒடி / வாகனத்த்தில் செல்லச் செல்ல நம்முடன் சேர்ந்துவரும்.
(2) உள்ளங்கால் தொட்டும் : கால் நிலவு (பிறை நிலவு) வருமாயின் அது கண்டு உள்ளம் பாய்ந்து பறித்திடத் தொடும்படி ஆசையூட்டும்.
(3) நடவாசல் சேர்த்திடினும், நாடா - விடங்காண் ; நிலவு(ஒளி) நடக்கும் வாசற்படி வரை வந்தாலும்... வீட்டினுள் / கோவிலினுள் செல்லாது... கண்டாயோ !
(4) உயர்வாய்த் தெரியு மோவியமுங் கொண்ட: உயர்வான / போற்றக்கூடிய ஓவியம் தன மீது வரையப்பட்டதுபோல இருக்கும். (பாட்டி வடை சுடுவது கேட்ட குழந்தைக்கு.)

செயலில் நிலவாஞ் செருப்பு : இவ்வாறான செய்கையினால் / ஒத்த பண்பினால் நிலவுபோல் ஆகுமே செருப்பு.