இராஜமன்னார்குடி ஆடிப்பூர தேர்த்திருவிழா கண்டருளும் வேளையில் , ஸ்ரீ. செங்கமலத்தார் சமேத ஸ்ரீவித்யா இராஜகோபாலன் திவ்ய தம்பதிகளுக்கு இப்'பா'மாலை சமர்ப்பணம் : (2017)
**********************
காப்புச் செய்யுள் :
சங்கொடு சக்கரத் தண்ட முடைவாளுந்
தங்கையில் வில்லும் தரித்துத்தன் - மங்கையாம்
செங்கமலத் தோடுச் சிறப்பாய்க் குடிகொண்ட
புங்கைமர நந்தனைப் போற்று ! (லாபம்)
****************************
ஆடியிலெம் மன்னையில் ஐயிரண்டு நாட்களிலும்
ஓடிவந்து காண்போமே ஓரன்னை - பாடியாடித்
தேடிவரு வோர்காணுஞ் செங்கமலத் தாயவளை
நாடிவர, நல்குவாள் நன்று. (1அ )
நன்றான வேளையில் நாம்வணங்க ஏதுவாய்
இன்றும், அரிமா வெழுகொடி சென்றுவந்து
ஓங்கிய கம்பி லுயரவே மன்னையன்னை
பாங்கொடு செல்வதைப் பார். (1ஆ)
****************************
செல்வதைப் பார்த்திடச் சேர்ந்திடுமே உள்ளபயன்;
சொல்லால் துதித்திடத் தோன்றிடுமே - நல்லபயன்;
அல்லவை நீக்கிடவே அன்னத்தில் அன்னைவர ^
இல்லையொரு துன்பமு(ம்) இங்கு ! (2)
****************************
துன்பமிங் கில்லை, துயரமும் இங்கில்லை;
இன்பங் கிடைக்குமே இவ்வெழில் - மன்னையில் ;
நன்னெறியால் நம்மவளை நாகத்திலே நாம்காண,
நன்மை நடக்கும் நமக்கு ! (3)
****************************
நடக்கும் நமக்கு நலமாய் எதுவும்;
தடங்கல் அகன்று தழைக்கும் - இடமாம்;
பதமாய்ப் பலரும் பணியும் பணிவால்
இதமாய் வருவாள் இணைந்து (4அ )
வருவாள் இணைந்து வனவேந்தன் ஏந்த,
பெருமாள் உடன்சேர் பெரிதாய்க் கருடன்
சரியாய்ப் பொருந்தும் சமயம் அமையப்
பிரியமாய் கண்டேன் பிறந்து ! (4 ஆ)
****************************
கண்டேன் பிறந்து, கமலமலர் மேலொரு,
பெண்குலம் போற்றும் பெரியவளை - மண்ணிலோர்
வண்ணமாய், வானுயர் மன்னையில், மன்னவன்
கண்ணன் துணையினைக் காண் ! (5)
****************************
துணையினைக் கண்டால் துயரம் விலகும்,
இணைக்கும் அருளால், இறுக்கும் - அணைப்பால்:
இணையிலாச் சேவகன் இலங்கையிற் கண்ட
கணையாழித் திருமகளைக் காண் ! (6அ)
திருமகளைக் காணலாம், தேர்ந்த பெரியோர்
ஒருங்கே மறைநான்கும் ஓதுந் - தெருவினில்
ஆர்வமாய் வெண்ணிற ஐராவ தந்தாங்க
ஊர்வலம் செல்வாளே ஊர்ந்து (6ஆ)
****************************
செல்வாளே ஊர்ந்து, செழுமைசேர் மன்னையில்,
நெல்லின் மணிகள் நிலைத்திட - எல்லிபோகு
மாலைவெயில் வீச, மரக்கால் அளக்கும்
வேலையை நாடிநீ வேண்டு (7)
# எல்லி-போகு = கதிரவன்+போகும் (மறையும் வேளை)
**********************************
நாடிநாம் வேண்டலாம்; நற்கதி தேடலாம்;
தேடினால் வந்திடும்; சேர்ந்துநாம் - ஆடியில்
கூடினால், ஓடுங் குதிரையில் காணலாம்
ஓடிவா, சேவையிங் குண்டு ! (8)
******************************
சேவையிங் குண்டு, தினமது கண்டுயாம்,
பாவையைப் போற்றிப் பணிந்துருகிக் - கோதையாய்
வந்திருக்குங் கோமகளை வண்ணமயத் தேரிலே
இந்நாளில் கண்டோம் இனிது (9)
*******************************
கண்டோம் இனிது; கலந்தோம் ஒன்றென
உண்டோ இதுபோல், உலகிலே? - மண்ணிலே
மாமணம் வீசும், மலர்சூழ்ந்த பல்லக்கில்
மாமகளைக் கண்டு மயங்கு ! (10 அ)
கண்டு மயங்கிக் கவிதை படித்தேனே !
வண்டு வராவதி மன்னையிற் - உண்டு
உறங்கிப் பணிந்தேனே! உன்னை உணரப்
பிறந்தேனே, ஆடியில் யான் ! (10 ஆ)
******************************
^ அல்லலின்றி அன்னத்தில் அன்னை அமர்ந்திட -- என்றும் வரலாம்.
ஸ்ரீ செண்டும் கையும் ஸ்ரீ செங்கமலாத் தாயார் துணை :
6 Comments (கருத்துரைகள்)
:
நன்று.
காப்புச் செய்யுள் நல்லா வந்திருக்கு.
"சங்கொடு சக்கரத் தண்டமுமங் கைவாளுந் தங்கையில் வில்லும் தரித்துத்தன்" - நாற்கரத்தானுக்கு சங்கும், சக்கரமும், தண்டமும் வாளும் கொடுத்தபின், கையில் வில்லையும் கொடுக்கிறீர்களே.
வேலையை நாடிநீ வேண்டு (7)
நாடிநாம் வேண்டலாம்; நற்கதி தேடலாம்;
இதில் தவறில்லை. இருந்தாலும், 'அந்தாதியில் முடிவை ஆரம்பமாக்கி அடுத்த செய்யுள் இருக்கவேண்டும். 'நாடி நீ வேண்டு' என்றபின், 'வேண்டிய' என்றும் ஆரம்பிக்காமல், 'நாடி நீ' என்றும் ஆரம்பிக்காமல், 'நாடி நாம்'' என்று ஆரம்பித்துள்ளீர்கள். இருந்தபோதும், இப்படிப் பாடுவதற்கும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.
1.7.3 - நம்மாழ்வார்
தூய அமுதைப் பருகிப்பருகி என்
மாயப் பிறவி மயர்வறுத்தேனே
1.7.4
மயர்வற என் மனத்தே
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
@நெல்லைத் தமிழன்
//கையில் வில்லையும் கொடுக்கிறீர்களே.//
"சங்கொடு சக்கரத் தண்டமு முடைவாளுந் ", என மாற்றிவிட்டேன். எங்கள் ஊரில் பரவஸுதேவன், இடையில்/உடையில் வாள் ஏந்தி இருப்பார்.
மறதியாய்த் தவறாக எழுதிவிட்டேன்.
*************
//வேலையை நாடிநீ வேண்டு (7)
நாடிநாம் வேண்டலாம்; நற்கதி தேடலாம்; //
தாங்கள் குறிப்பிட்டது சரிதான்.
சொல்லும், பொருளும் பொருத்தமாய் வர இப்படி அமைத்தேன். 'நான் நாடுகிறேன்.., நீயும் நாடு' -- என எனது உற்றாரையும் நண்பர்ளையும் அழைப்பது போல
இப்படி 'நாடி நாம் வேண்டலாம்' என்று பொருள் வரும்படி எழுத விழைந்தேன்.
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
"எல்லிபோகு மாலைவெயில் வீச, மரக்கால் அளக்கும் "
இந்த வரிகள் என் மனத்தில் இருந்துகொண்டே இருந்தன. எதோவொரு சந்தேகம்.
எல்லி என்பது இராத்திரி என்பதைக் குறிக்கும். பெரியாழ்வார் திருமொழில, 3-10ம் பத்தில்,
"அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே
எல்லியம்போ தினிதிருத்தல் இருந்ததோ ரிடவகையில்
மல்லிகைமா மாலைகொண்டுஅங்கு ஆர்த்ததும்ஓ ரடையாளம்."
இதில், எல்லியம்போது என்பதன் அர்த்தம், அம் எல்லி போது, அதாவது, அழகிய இராத்திரி வேளையில். அப்போ, 'எல்லிபோகு மாலைவேளை' என்பது தவறல்லவா? அப்போ, 'எல்லிபோகு' என்பதற்குப் பதில், 'பக்தனாய்' என்று போட்டால்,
... - பக்தனாய்
மாலை வெயில்வீச மரக்கால் அளக்கும்
வேலையை விரும்பி'நீ (அல்லது நாடி'நீ) வேண்டு
என்பது சரியாக இருக்குமல்லவா?
பக்தனாய் - இதை பத்தனாய் என்று எழுதுவது சரியானது (பக்தி-வடமொழி, பத்தி-தமிழ், பத்திசாரர் என்பது ஆழ்வார் ஒருவரது பெயர்)
@நெல்லைத் தமிழன்
Thanks for point out an important thing.
எல்லி = சூரியன், பகல், இரவு, இருள்
Source :
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
Post a Comment