Showing posts with label மன்னார்குடி. Show all posts
Showing posts with label மன்னார்குடி. Show all posts

ராத்திரியில் சூரியன்

இந்தியாவில் வருடத்தில் இரண்டு நாட்கள் இரவில் சூரியன் வரும்.. எங்கு தெரியுமா ?

முன்னுரை :
நள்ளிரவு சூரியன் (Midnight Sun) நாடு எது உங்களுக்குத் தெரியுமா ?
'நார்வே' என்று நீங்கள் படித்திருக்கலாம்.
கனடா, அலாஸ்கா (யு.எஸ்), டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து, ரஷ்யா போன்ற பகுதிகளும் இந்த வகையில் இருப்பதாக விக்கிபீடியா சொல்லுகிறது. இந்தப் பகுதிகள் ஏன் இப்படி அழைக்கப் படுகிறது என்பதையும் விவரமாக சொல்லுகிறது. 
ராத்திரி சூரியன் - நார்வே
சரி இப்போது முதல் வரியில் சொன்ன கேள்விக்கு வருகிறேன். தமிழ் நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி(மதிலழகு) என அழைக்கப் படும் ஊரில், ஹி.. ஹி.. பில்ட் அப் போதுமா.. நா பொறந்த வளர்ந்த ஊருதான்..  அங்க தான் ராத்திரியில் சூரியன் வரும்.. அதுவும் வருஷத்துல ரெண்டு நாளு வரும்.. 

அந்த ரெண்டு நாளுல ஒரு நாள் -- இன்றே.. இன்றுதான்.. ( 1st ஏப்ரல் 2011 ). அட.. உங்களலாம் முட்டாளாக்க இப்படி சொல்லலை.. உண்மையத்தான் சொல்லுறேன். அட நம்புகப்பா..  நம்புங்க.. நா அந்தளவுக்கு டுபாக்கூர் ஆசாமி இல்லை.

ஊர் பேரு ராஜ மன்னார்-குடி, 'குடி' என்றால் கோயில், தெலுங்கு மொழியில். எங்க ஊரு ராஜா ஸ்ரீராஜகோபாலஸ்வாமிக்கு, பங்குனிப் பெருவிழா என்று வருடந்தோறும் திருவிழா வரும். பங்குனி மாதத்தில் ரோஹிணி  நக்ஷத்திரம் வரும் நாளில் தோரோட்டம் நடைபெறும். அது இவ்விழாவின் பதினேழாவது நாளாகும்.  அதாவது தேரோட்ட நாள் வருவதைப் பொறுத்தே மற்ற விழாநாட்கள் அமையும். முதல் பதினெட்டு நாட்கள் வெளி உலாவிலும் பின்னர் பன்னிரண்டு நாட்கள் கோவிலுக்கு உட்பட்ட வெளிப் புறத்திலும், ஆக ஒரு மாதம் முழுவதுமாக கொண்டாட்டம்தான். இறுதி நாளான முப்பதாவது நாளில் தெப்பத் திருவிழா அமையும்.

அந்த விழா நாட்களில் ஒருநாள், அதாவது பத்தாவது நாளில் சூரியப்ரபை எனும் வாகனத்தில் எங்களூர் அரசர் அமர்ந்து வருவார். இந்த நிகழ்ச்சி இரவில் நடைபெறும். அதாவது சூரியனின் மீதமர்ந்து இரவில் வீதி உலா வருவார் எங்க மஹாராஜா. இந்த வருடம் அத்தகைய நாள், இன்றேயாகும். அந்த ராத்திரி சூரியனைப் பார்க்க வேண்டுமா.. இதோ வலது புறத்தில், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளால் செய்யப்பட்ட சூரிய வட்டத்தின்(சூர்யப்ரபை)  நடுவே புல்லாங்குழலூதும் கண்ணன், எங்களூர் மன்னன்.
 
டிஸ்கி :
படங்களுக்கு நன்றி ---
======================================

ஊருல விசேஷங்க


என்னதான் சொல்லுங்க... எந்த ஒருத்தருக்கும், தான் பிறந்த ஊரும், வளர்ந்த ஊரும் ரொம்பப் பிடிக்குமுங்கோ.. அதுல, பிறந்து வளர்ந்தது ஒரே ஊரா இருந்தா.. சொல்லவே வேணாம்.. நம்ம ரஜினி காந்த் 'படையப்பா படத்துல சொல்லுற மாதிரி' ... 'ரொம்ப.. ரொம்ப.. ரொம்பவே' பிடிக்குமுங்கோ..

நா பிறந்து, வளர்ந்து.. படிச்ச (எனக்கு பிடிச்ச) ஊரு மன்னார்குடி. எங்க ஊருக்கே ரொம்ப பெருமை சேக்குற விஷயம், அழகான மதில்கள் சூழ்ந்த பெரிய கோவிலும் (மன்னார்குடி மதிலழகு), அதன் திருவிழாக்களும்.. ஆமாங்க, வருஷம் பூராவும் அதாவது எல்லா தமிழ் மாசத்துலயும், ஏதாவது ஒரு திருவிழா உண்டு, எங்க ஊரு கோவிலுல. இருந்தாலும் பல வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கும் 'கும்பாபிஷேகம்' ஒரு தனி விஷேஷந்தான ?

இது முன்னால 1995 ம் வருஷம் ஜூன் மாசத்துல 'கும்பஷிஷேகம்' ரொம்ப விமரிசையா நடத்தினாங்க.... அந்த நாள் ஞாபகம் இப்ப ரொம்ப வருது.. ஏன்னா.. நாளைக்கு (22 ஆகஸ்டு 2010), அதாவது 15 வருஷத்துக்கு அப்புறம், எங்க ஊரு பெரிய கோவிலுல 'கும்பாபிஷேகம்' நடக்க போகுது. நான் 1200 கிலோமீட்டருக்கு அப்பால இருந்தாலும், என்னோட மனசு மன்னர்குடிலதான் இருக்குது.. ஆமாம் நேர்ல இந்த விசேஷத்துக்கு போக முடியலேன்னு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.. இந்த விழாவில் பங்கு பெரும் அனைத்து மக்களும் என்னைப் பொறுத்தவரை ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க தான்.. எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு அவங்க மேல. இருந்தாலும், 'ஸ்ரீ செங்கமலத் தாயார் சமேத ஸ்ரீ ராஜகோபாலன்' (எங்கள் தெய்வம்) எப்பவுமே எங்களோட இருப்பதாக அணுவளவும் சந்தேகமின்றி சொல்லுவேன்.

மேலும் ஆர்வமிருந்தால் பின்வரும் வலை-நிலையங்களை பார்க்கவும்...
  1. http://www.thehindu.com/arts/history-and-culture/article582320.ece?homepage=true
  2. http://www.divyadesam.com/purana-temples/mannargudi-temple.shtml
  3. http://www.onlytravelguide.com/tamilnadu/spiritual/mannargudi-temple.php
  4. http://www.templenet.com/Tamilnadu/rajamann.html
அட தேவையில்லாம என்னத்தையோ சொல்லிப்புட்டு இருக்கேன்... சிம்பிளா கூகுள்ள 'மன்னார்குடி temple'ன்னு சர்ச் பண்ணத்தெரியாத உங்களுக்கெல்லாம் ?


திருவிழாக்களும், பண்டிகைகளும் மக்களை, மொழி-இன-மத வேறுபாடின்றி, மகிழ்வோடு வாழ வைப்பதற்கே என நினைத்து வாழும் உள்ளம்,
-- ஸ்ரீ. மாதவன்

எங்கள் மண்ணின் தெய்வத்தின் காலடியில், இப்பதிவினை சமர்ப்பிக்கிறேன்.