ரொம்ப தெளிவாத்தான் இருக்கான்..

நாம படிச்ச காலத்துல 'ஹிந்தி' சப்ஜெக்டு ஸ்கூலுல கெடையாது.. வேலைக்காக வேற மாநிலத்துக்கு, முக்கியமா வட(நோ.. நோ.. நாட் "மீ தி ஃபர்ஸ்டு" அது 'வடை'.. இது 'வட'-திசை) இந்தியா பக்கம் போன ஆரம்ப நாள்ல.. 'ஹிந்தி' தெரியாம நா பட்ட கஷ்டம்.. அனுபவப் பட்டவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா 'ஹிந்தி' கத்துக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு ஹிந்தி தெரிஞ்ச/புரிஞ்ச சமயத்துல ஒருத்தன் ஹிந்தில சொன்ன ஜோக்க புரிஞ்சுக்க எனக்கு ரெண்டு நாளாச்சு.. (நல்ல வேளை, அது டியூப் லைட்டு ஜோக்கு இல்லை).

எது எப்படியோ, 'ஹிந்தி' தெரிஞ்சதுனால ஒரு மொக்கையாவது போட முடிஞ்சுது (இது ரெண்டாவது). சரி விஷயத்துக்கு வாரேன்.

நாம பட்ட கஷ்டம் நமக்கடுத்த தலைமுறைக்கு அநேஹமா இருக்காது.. இப்பலாம் எல்லா ஸ்கூலுளையும் 'ஹிந்தி' சொல்லித்தராங்க. நம்ம பையனுக்கு ஒண்ணாம் க்ளாஸ்லேருந்து 'ஹிந்தி' பாடம் உண்டு. இந்த (ரெண்டாம் கிளாஸ்ல) அவனுக்கு 'கதை-கட்டுரைகளும்' 'ஹிந்தி' பாடத்துல இருக்குது. நம்ம வீட்டம்மாக்கு நம்மளவுக்கு 'ஹிந்தி' தெரியாது( இதுலயாவது நமக்கு முதலிடம், வூட்டுல). அதனால ரெண்டு நாளைக்கு முன்னால, நம்ம பையனுக்கு பாடம் சொல்லித்தர வேண்டி இருந்தது.. பாடத்தின் பக்கத்த கீழ படத்துல கொடுத்துருக்கேன். 'சிங்கத்தின் சப்தம்' (शेर की आवाज) என்ற தலைப்பில் அமைந்த ஒரு சிறிய நிகழ்வை சொல்லும் பாடமது.

சாராம்சம் : சிறுவர்-சிறுமியர் ஒரு முறை வயல் வெளிக்கு சென்றனர். அங்கு நன்றாக விளையாடினார்கள். பலவித பழங்களையும் உண்டு மகிழ்ந்தனர். பிறகு மீண்டு விளையாடினார்கள். அப்போது, ரமேஷ் என்ற சிறுவன், சிங்கத்தின் முகமூடியினை (மாஸ்க்) அணிந்துகொண்டு சிங்கம் போல கர்ஜனை செய்தான். அதனைக் கண்ட மற்ற சிறுவ-சிறுமிகள் பயந்து விட்டார்கள். பயத்தில் ஓட ஆரம்பித்தார்கள்.

நில்லுங்கள் ! நில்லுங்கள் ! இங்கு சிங்கம் (சிங்கிளா கூட) இல்லை.. இல்லவே இல்லை. ரமேஷ்தான் சிங்கம் போல வேடம் பூண்டிருக்கிறான். எல்லாரும் பயந்து விட்டீர்களே! ஆஹா, என்ன அருமையான வேஷப் பொருத்தம்.. அச்சசல் சிங்கம் போலவே கர்ஜித்து எல்லோரையும் பயமுறுத்தி விட்டானே அவன். அதான் சங்கதி.

இதுக்கும் தலைப்புக்கு என்ன சம்பந்தம் ? இருங்க தலைப்ப நா இன்னொருதரம் பாத்துட்டு பதில் சொல்லுறேன். ஆங்... தலைப்பு சரியாத்தான் இருக்கு.. நம்ம பையன் கொஞ்சம் தெளிவாத்தான் இருக்குறான்.

நம்ம பையனுக்கு நான் சொல்லித் தரும் பொது "ரமேஷ் என்ற சிறுவன், சிங்கத்தின் முகமூடியினை (மாஸ்க்) அணிந்துகொண்டு சிங்கம் போல கர்ஜனை செய்தான். அதனைக் கண்ட மற்ற சிறுவ-சிறுமிகள் பயந்து விட்டார்கள். பயத்தில் ஓட ஆரம்பித்தார்கள்.", என்ற வரிகளை சொல்லியவுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்த்துவிட்டு, "எதுக்கு பயந்து ஓடுறாங்க ?. அதுதான் சிங்கம் இல்லியே.. அது லயன்-மாஸ்க் போட்ட ரமேஷ்தானே' அப்படீங்கறான். இப்ப சொல்லுங்க, நம்ம பையன் வெவரந்தானே ?

ஏன் ? எதற்கு ?

சின்ன வயசுல அம்புலிமாமா படிச்சிருப்பீங்க..  அதே ஸ்டைலுல ஒரு கதை.. என்னோட சொந்த பாணில..


தன்  முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் தனது நீண்ட வாளை எடுத்துக் கொண்டு, மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்ட வேதாளத்தை தன் தோள் மீது போட்டுக் கொண்டு கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தான். போகும் வழியில் அவனிடமிருந்து விடுபட, அவனது மௌனத்தை கலைக்க வேண்டும். இதனை மனதில் நினைத்த வேதாளம், வழக்கம்போல ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது...

சிம்மபுரி என்ற நாட்டை சுயமித்தரன் என்ற அரசன் சீரோடும் சிறப்போடும் ஆண்டு வந்தான்... அவனது  ஆட்சியில் மக்களும் நேர்மையாக உழைத்து நாட்டிக்கு பெருமை சேர்த்தனர்...  மக்கள் மீது அரசன் வைத்திருந்த அன்பும், பண்பும் அனைத்து மக்களையும் கவந்திருந்தது. அரண்மனை இரவுக் காவலாளி முத்து அந்த அரச குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான்.

அந்நாட்டின் இளவரசன் வில்வித்தையில் நன்கு கற்று தேர்ச்சி பெற்றிருந்தான். ஒருமுறை, இளவரசன் காட்டிற்கு தோளில் அம்பறாத்துணி நிரம்பிய அம்புகளை ஏந்தி வில்லுடான் (will )  -வேட்டையாட கிளம்பும் பொது, முத்து அவனிடம் சென்று.. முந்தைய இரவு தான் தூங்கும் பொது, கனவில், இளவரசனுக்கு, காட்டில் பேரபாயம் காத்திருப்பதாகவும், வேட்டைக்கு போகவேண்டாமெனவும் சொன்னான். இளவரசனோ, தனக்கு தனது வில் வித்தையில் மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும், தனக்கு காட்டில் தீங்கு நேராது எனவும் சொன்னான்.

அதற்கு முத்து, "அந்த அபாயம் விலங்கினால் அல்ல", இளவரசரே என்றான். 'விலங்கினால் அல்ல' என்பது தனக்கு 'விளங்கும்' படி விளக்கிச் சொல்லுமாறு  கேட்டான்.  அதற்கு முத்து, காட்டினுள் இளவரசன் செல்லும்போது அதி பயங்கர மின்னல் இடியுடன் மழை போயிந்ததகவும்.. இளவரசன் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒதுங்கவும், சிறிது நேரத்தில் அந்த கட்டிடம் இடிந்து இளவரசன் மேல விழுந்து அவனது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியதை, தான் கண்டதாக சொன்னான்.

இதை கேட்டதும், இளவரசன் இடி போலச் சிரித்து.. "மழை வரும் முகாந்திரம் எதுவுமே இல்லை.. நீ சொல்வது வியப்பாக இருக்கிறது, எனது நேரத்தை வீணடிக்காதே.. நான் வில் வேட்டைக்கு செல்கிறேன்", எனக் கூறி போக முற்பட்டான். அதனை கேட்டுக் கொண்டிருந்த அரசனோ, இளவரசனை தடுத்து, அன்றையதினம் வேட்டைக்கு போகவேண்டாமெனவும் கட்டளையிட்டான்... 'அரச கட்டளை' மீற முடியுமோ, இளவரசனும் தனது வேட்டை பயணத்தை நிறுத்திக் கொண்டான். 

முத்து சொன்னதுபோலவே சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் காட்டில் கனமழை பொழிந்து, ஒரு பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக மறுநாள் தெரிய வந்தது. அதனை கேட்ட இளவரசன், தனது தந்தையான அரசரிடம், தனது உயிரைக் காத்த முத்துவிற்கு, பரிசளிக்கும்படி வேண்டினான். தந்தையும் முத்துவிற்கு பரிசளித்தது மட்டுமில்லாது, அவனை பணி நீக்கமும் செய்தான். 

'கதையை நன்கு கேட்டாயா விக்கிரமாதித்தனே ? தனது மகனின், நாட்டின் இளவரசனின் உயிரினை காத்த முத்துவை, பணி நீக்கம் செய்த அரசனின் செயல் சரிதானா ? சரியானால் என்ன காரணம்? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் நீ சொல்லவில்லையானால், உன் தலை சுக்கு நூறாகட்டும்', என்றது வேதாளம்.

வழக்கம் போல், விக்கிரமாதித்தன் சரியான பதிலை சொல்லவே, அவனது மௌனம் கலைந்த காரணத்தினால், வேதாளம் மீண்டும் முருங்கை மரமேறியது.

விக்கிரமாதித்தன் சொன்ன பதில் என்ன ? பின்னூட்டமாக சொல்லவும்.  எல்லோரும் முயற்சி செய்ய வசதியாக பின்னூட்டம் தற்போது வெளியிடமாட்டேன்....