சின்னச் சின்ன அனுபவங்கள்..

வெவ்வேற காரணத்துக்காக, மூணு மாநிலத்துக்கு ஃபோன் பண்ண வேண்டி இருந்திச்சு. மூணுமே பி.எஸ்.என்.எல் சர்விஸ்தான்.

1 ) வடமாநிலத்திலிருந்து  வந்த பதில். "ஆப் டயல் கியகயா நம்பர் வியஸ்த் ஹே. க்ருப்யா தோடி தேர் பாத் டயல் கீஜியே. " (நீங்கள்  டயல் செய்த என் தற்போது உபயோகத்தில் உள்ளது..........................)

2 )  மத்தியப்  பிரதேசத்திலிருந்து வந்த பதில் "தி நம்பர் யு ஹாவ் டாயல்ட் ஈஸ் பிஸி, டிரை ஆஃப்டர் சம் டயம்."

3 ) நம்ம தமிழ்நாட்டிலிருந்து வந்த பதில் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்சமயத்தில் பிசியாக உள்ளது. தயவு செய்து சிறிது நேரத்திற்கு பின்னர் தொடர்பு கொள்ளவும்"

--- மொத ரெண்டும் சரியாத்தான் இருக்கு மூணாவதுல ஒரு தப்பு இருக்கு கண்டு பிடிங்க பார்க்கலாம்..

--------------------------------------------
மேற்கு மற்று கிழக்கு இந்திய(நாமதான்) அணிகளுக்கிடைய நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் கடைசி பந்து முடிந்தவுடன், முதலில் எனக்குத் தோன்றியது "மேச்சு 'டை' ஆயிட்டுது, ஆனால் எதுக்கு டிரான்னு எழுதி இருக்காங்களே". ஐந்து நிமிடத்திற்கு அப்புறம்தான் அந்த மேட்ச்சு எப்படி 'டிரா'னு புரிஞ்சுது......லேட்டா புரிஞ்சாலும் சரியா புரிஞ்சுதே..!
--------------------------------------------
துவக்கப் பள்ளியில் பயிலும் வயதுள்ள அண்ணனும், கிண்டர் கார்டனுக்கு சென்றுவரும் தங்கையும் மெடல் ஸ்பூன்-லெமன் ரேஸ் விளையாடினாங்க வீட்டுக்குள்ள. பொண்ணு சின்னவ.. லெமன் கீழ விழுதுடிச்சு. உடனே அண்ணனோட லேமனையும் கீழ விழ வைக்குறதுக்காக அவனோட வாயில இருந்த ஸ்பூன தன்னோட கையாள தட்டி விட முயற்சி பண்ணா...  ஸ்பூன் அண்ணனோட வாய் உள்ள போயி வாய்குள்ள மேல் பகுதில, ஸ்பூனோட பின்புறம்  குத்தி காயம் பண்ணிடிச்சு. அஞ்சு நிமிஷம் ரத்தம் வந்து அப்புறமா நின்னுடிச்சி. காயம் மட்டும் ரெண்டு மூணு நாளுல ஆறிடும், கவலை வேணாம்னு டாக்டர் சொன்னாங்க. 
       இந்த மாதிரி விளையாட்ட/போட்டிய  ஸ்கூலுல எதுக்கு சின்னப் பசங்ககிட்ட சொல்லித் தராங்களோ தெரியல...... சின்னப் பசங்க விளையாடச்சே பெரியவங்களோட கவனிப்பு / மேற்பார்வை கண்டிப்பா வேணும்..
------------------------------------------------------- 
அந்த போன் மேட்டர்ல இருந்த தவறு..  "அட, அந்த எண்ணோட தொடர்பு கெடைக்கவே இல்லையே...(பேச முடியலியே) அப்புறம் எப்படி 'நீங்கள் தொடர்பு கொண்ட'னு ஆட்டமேடிக் வாய்ஸ் மெசேஜ் வரலாம் ? 
----------------------------------------------

Y this 'கொலவெறியும்', 'வடகறியும்'

ஒரு மனுஷனுக்கு காதலிகிட்ட பல்ப் வாங்கி  கொலவெறியோட இருந்தா, அவருக்கு ஒரு வடகறியும், ஞாபகத்துக்கு வரலாம்.

எப்படியா ?

இதோ நா (நம்புங்க.. ஸாக்ஷாத் நாந்தேன்..)  எழுதின லிரிக்ஸ் இந்த டெரர்  கும்மி லிங்க்ல இருக்கு போயி படிச்சிட்டு சொல்லுங்க, சரியா இல்லையானு.

அன்புடன் ,
மன்னை மாதவன்.
---------------------------------

அமிதாப்பச்சனின் பேத்தி பெயர்..

எந்த ஒரு பொருளுக்கும், ஆளுக்கும் பேருன்னு ஒன்னு இருக்குது. அது சும்மா (ஜஸ்ட்) ஒரு அடையாளத்துக்குதான். இருந்தாலும் சிலரது பெயர் வித்தியாசமா இருக்கும். குடும்பத்துல இருக்குறவங்களுக்கு பொதுவா அடைமொழி இருக்கும், அது பெயருள வரும். உதாரணமா சர்-நேம் என்பது தமிழ்நாட்ட விட்டு வெளிய போனா கண்டிப்பா நீங்க சந்திப்பீங்க. 'ஷர்மா, வர்மா, சிங், பாட்டில், முகர்ஜி., etc.', இதெல்லாம் சர்நேம். (இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்). அவங்களுக்கெல்லாம் ஒரு வசதி. யாராவது ஒருத்தரு பெயருள ரயில்வே டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு மத்தவங்க  யாராவது ஒருத்தர் பயணம் பண்ணலாம்.  உதாரணம்: ஆர். ஷர்மா டிக்கட்டுல ராகேஷ் ஷர்மா, ராஜீவ் ஷர்மா, ராஜேஷ் ஷர்மா யாரு வேணா போகலாம்.

நம்ம தமிழ்நாட்டுல பெரும்பாலும் சர்-நேம் வச்சுக்குறது வழக்கத்துல இல்லை. ஆனாலும் பாருங்க, சகோதர, சகொதரிக்கேல்லாம் பேருல ஏதாவது பொதுவா இருக்கும். எனக்கு தெரிஞ்சு,
  • ஒரு குடும்பத்துல எல்லாரோட பேரும் 'ராஜ'னு ஆரம்பிக்கும்.
  • இன்னொரு குடும்பத்துல ஏ.ஆர்.னு இனிஷியலோட பெயர் 'ஆர்'ல ஆரம்பிக்கும். அவங்க ஒரு 'ஏ.ஆர்.ஆர்' குடும்பம். 
  • 'ஸ்ரீ'னு ஆரம்பத்துலயும்.. ஒரு குடும்ப உறுப்பினர்கள் பெயருள இருக்கும்  (எனது அண்ணன் பையன்கள் கூட ஒரு உதாரணம்).
  • 'ஸ்ரீ'னு முடியுமாரும் வேற அண்ணன்-தம்பி-சகோதரி பேருல வந்திருக்கு.
  • 'ப்ரியா'னு முடியராமதிரி ஒரு அக்கா-தங்கையை சந்தித்திருக்கேன்.
  • என்னோட சகோதரர்கள் பெயரிலும், எனது பெயர்  உட்பட 'ன்' என்று முடியும் ஒருவர் தவிர. அதன் காரணமாகவோ என்னவோ அவர் மட்டும் அக்கவுண்ட்ஸ் படித்தார், மற்றவர்கள் அறிவியல் படித்தோம் (கல்லூரிப் படிப்பு)

இப்ப எதுக்கு இந்தப் பதிவா?

அமிதாப் பச்சனோட பேத்திப் பெயர் -- அபிஷேக் பச்சனோட பொண்ணுக்கு என்ன பேரு வெப்பாங்களோ, அதுதான். ஓகே.. ஓகே.. அடிக்க வராதீங்க.. ஒரே ஒரு க்ளூ கொடுக்கறேன். 'பச்சன் சாஹிப்' வீட்டுல 'அமிதாப், அபிஷேக் , (ஐ)அய்ஸ்வர்யா' அதே வரிசையில பேபி பச்சனுக்கும் 'அ' வில் ஆரம்பிப்பதுபோல பெயர் இருக்குமென. அபிஷேக்  பச்சன் சொல்லியதாக கேள்விப்பட்டேன்.
டிஸ்கி : பத்திரிகை படிச்சு நானும் இப்படி ஆயிட்டேன். படிக்கத் தூண்டுறமாதிரி தலைப்பு கொடுத்துட்டு, அதப்  பத்தி எழுதாம, சம்பந்தமே இல்லாமே மேட்டர முடிக்கறது.

படங்கள் உதவி கூகிள் இமேஜெஸ். 
---------------------------------------------

குழந்தைகளின் யோசிப்புகள்..


அஞ்சு வயசு பையன் : இதென்னப்பா ? (ஹோட்டலில் இருந்த 'Fire exit ' போர்டை காண்பித்தபடி)
அப்பா : இங்க தீப்பிடிச்சா இந்த கதுவு வழியா போகணும்.
பையன் : இந்த கதவுப் பக்கம் தீப்பிடிச்சா ?
-------------------------------------
பரமதம் போல டாம் அண்ட் ஜெர்ரி கேம்.. அதுல ஒரு சில கட்டங்கள்ல போயிட்டா, பணிஷ்மென்ட் 'மிஸ் எ டர்ன்(turn)'. இந்த ரூல பையன் கிட்ட சொல்லிட்டு இருந்தார்  ஒரு அப்பா. கவனமா கேட்டுக்கிட்டு இருந்த அவரோட அஞ்சு வயசு பையன் கேட்ட கேள்வி..
"ஒரே சமத்துல டாமும் ஜெர்ரியும் அந்த கட்டத்துல வந்திட்டா, எப்படி 'டர்ண மிஸ் பண்றது'?"
-------------------------------------
என்னோட அக்காவின் முதல் குழந்தை மூணு வயசு இருந்தப்ப, அக்காவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதிகாலை நேரமானதால், மூணு வயசே ஆன, முதல்  குழந்தையை வீட்டில் மற்றவர்களுடன் தூங்க வைத்திருந்தோம். காலை ஆனதும் அந்தக் குழந்தையை, அம்மாவுக்கு பாப்பா பிறந்திருப்பதாலும், தாயைக் காணும் ஆர்வத்தாலும் என்னோடு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். ஆஸ்பத்ரியில் சில மணிநேரம் தங்கி குழந்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். வீட்டிலிருந்தவர்கள் அந்தப் முதல் குழந்தையிடம் குட்டி பாப்பா பற்றி கேட்ட பொது "பாப்பா நல்லாத்தான்  இருக்கு ஆனா என்கூட பேசவே இல்லை.. ", என்றது.  நாங்கலாம் சிரிச்ச சிரிப்புக்கு அந்தக் குழந்தைக்கு அப்ப அர்த்தம் புரியலை. இப்ப இந்தப் பதிவ படிச்சா கண்டிப்பா புரியும்.
-------------------------------------
ஒரு ஃகிஃப்ட்  ஐட்டம்... அதுல ஒரு க்வார்ட்ஸ் க்ரிஸ்டல் கடிகார இயந்திரம், நிமிட, மணி, வினாடி முள் மூன்று, ஒரு பேட்டரி, அஞ்சு விதமான வாட்டர் கலரிங், பிரஷ் சகிதமா அஞ்சு டயல்.. வெவ்வேற  அவுட்லயனோட நம்ம இஷ்டத்துக்கு கலர் அடிச்சு ஏதாவது எழுதி டயல ரெடி பண்ணலாம். ஒரு கார்ட்போர்டு, பாக்ஸ் மாதிரி மடிச்சு வெக்க கட்டிங் சகிதம். இத கொடுத்து 5 -7 வயசு குழந்தைகள் தாங்களே படம் வரைஞ்சு  ஃபிட் செய்ஞ்சா.. ஒரு வொர்கிங் கிளாக் ரெடி..

இதப் பாத்ததும் ரொம்ப ஆர்வமா பையன் கிளாக் செட் செய்ய ஆரம்பிச்சான். அத ஆர்வமா என்னோட பொண்ணு பார்த்துக் கொண்டிருந்தாள்.

இத ரெடி பண்ணி பேட்டரி மாட்டினதும் என்னோட நாலு வயசு பொண்ணு, "ம்ம்ம்.. மூணு ஹான்ட்ல ரெண்டு வொர்க் பண்ணல.. இந்த ரெட் ஹாண்ட் மட்டும்தான் வொர்க் பண்ணுது", என்றாள் அந்த வினாடி முள்ளை சுட்டிக் காட்டியபடி.
---------------------------------

டிஸ்கி  :  முதலிரண்டும், எனது அலுவலக நண்பரும் அவரது பையனும். மற்ற இரண்டும் நம்ம வீட்டு அனுபவம்.
------------------------------------------

நம்மளோட மதிப்பு

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது ?

சும்மா,  'madhavan73' னு கூகிளாண்டவர் கிட்ட கேட்டப்ப  நம்ம நண்பர்கள் டெரர் பாண்டியன், சிரிப்பு போலீஸ் வந்தா மாதிரி ஒரு ஃபீலிங் / இன்டிகேஷன். என்னடான்னு கூர்ந்து காதுகொடுத்து கேட்டா 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூதூதூதூதூதூதூதூதூதூதூதூ' னு துப்பிச்சு.. அதான் இதோ படமா இங்க கொடுத்துள்ளேன்..
 

http://www.statshow.com/madhavan73.blogspot.com?update=1

அண்ணன் வீடுதிரும்பல் மோகன் மற்றும் சகோதரி, ராம்வி கேட்டுக் கொண்டதற்கிணங்க, நீங்களும் உங்கள் பிளாகின் மதிப்பை தெரிந்துகொள்ள இப்படி முயற்சி செய்யலாம்.  http://www.statshow.com  என்னும் தளத்திற்கு சென்று உங்கள் வலைப் பதிவின் முகவரியை கொடுத்துப் பாருங்கள்.

கதம்பமாலை

சென்ற 7ம் தேதி முதல் இன்று(14ம் தேதி)  காலை வரை அலுவல் பணி சம்பந்தமாய் வெளியூர் சென்று வந்ததால் வலைமனையில் ஈடுபட முடியவில்லை. முக்கியமாக 10ம்  மற்றும் 11ம் தேதியில் ஓரிரு நிமிடங்கள் வரையில் மட்டுமே எனது ஈ-மெயில் பார்க்க முடிந்தது. நான் வழக்கமாக பின்தொடரும் பதிவுகள் உட்பட எந்த வலைமனை பதிவுகளையும் படிக்கவும் முடியவில்லை. எனவே பல்வேறு பதிவுகளுக்கு எனது பின்னூட்டம் இல்லாதது கண்டு ஏமாற்றமடைந்த (!) பதிவர்கள் அனைவருக்கும் எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊருக்கு திரும்பும் வழியில், வலைமனை நண்பர் வெங்கட் நாகராஜ்  தில்லியில், என்னை ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று ஷாப்பிங்கில் உதவி செய்தும், பின்னர் தனது இல்லத்தில் சுவையான தென்னக-விருந்தை மதிய-உணவாக வழங்கிய அன்னாரின் துணைவியாருக்கும் (இவர் கோவை-டு-டெல்லி என்ற வலைப்பூவின் ஆசிரியர்/உரிமையாளர்) மனமார்ந்த நன்றிகள்.  தமிழ் வலைமனை உலகில் நான் கலந்து கொள்ள ஆரம்பித்த பின்னர், எனக்கு அறிமுகமான (இங்கு வருவதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் தவிர்த்து) வலைமனை நண்பர்களுள், நான் நேரில் சந்தித்த முதல் நபர், வெங்கட் நாகராஜும் அடுத்த நபர் அவரது துணைவியாரும் தான். மூன்றாவது நபர் நீங்களாகவும் இருக்கக் கூடும், காலம்தான் பதில் சொல்லும்.

சவால் சிறுகதையில் நானும் கலந்து கொண்டு எழுதிய கதைக்கு இங்கு சுருக்கமாக விமர்சனம் செய்துள்ளார் நண்பர் ஆதி. அவருக்கு நானும் எனது நன்றியையும் விளக்கமும் கொடுத்துள்ளேன். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில், சொல்ல மறந்த மேலும் ஒரு விளக்கம்.

"லாப்டாப்பிலிருக்கும் டேட்டாவை பாதுகாக்க ஏகப்பட்ட டெக்னிகல் விஷயங்கள் கதை படிப்பதை அந்நியபடுத்திவிடுகின்றன."

இது அறிவியல் கற்பனைக்கதை  அல்ல. சாத்தியமாகக் கூடிய முறைதான். விவரம் தெரிந்தவர்கள் ஆழ்ந்து படிக்கலாம். விவரம் புரியாதவர்கள் மேலோட்டமாக அப்படி ஒரு முறை இருப்பதை புரிந்துகொள்ளக் கூடிய வகையில் தான் கதை சென்றுள்ளதாக நான் நினைக்கிறேன். மேலும் வாசகர்களுக்கு ஏதாவது எனது கதை பற்றி சந்தேகமிருந்தால் கேளுங்கள், கண்டிப்பாக பதில் சொல்கிறேன். தவறு இருப்பின் ஒற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை உடையவன் நான் (என்று நம்புகிறேன்).

சென்ற வருடம் போலவே எங்கள் குடியிருப்பு பகுதியில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப் பட்டது. மாணவ மணிகள் இறையுணர்வும், தேசப்பற்றுடனும்  ஆடலும் பாடலும் செய்து காண்பவர்களை மகிழ்ச்சியுறச் செய்தனர். சினிமாப் பாடல் இல்லாத ஒரு நிகழ்ச்சி மன நிறைவைத் தந்தது.

சின்ன வயசு ஞாபகங்கள்.

சின்ன வயசுல நடந்தது எல்லாமே ஞாபகம் இல்லேன்னாலும் சில விஷயங்கள் நெனப்புல  நல்லா பதிஞ்சிருக்கும். அந்த வகையில சில..
  
நானு, ஸ்கூல் படிக்கறப்ப போஸ்ட் கார்டு, பதினஞ்சு பைசாக்கு கெடைச்சுது. இப்ப அதோட விலை என்ன ? இ-மெயில், செல்போன்..  இவை வந்த பின்னர் தபால்-கடிதம் எழுதும் பழக்கம் போயே போச்சு..

எங்க ஊரு கோவில் ரொம்ப பெருசு.. பதினாறு கோபுரம் இருக்கும். அதுல வடக்கு உள்சுவர் கோபுரத்துல, நண்பர்களோட சேர்ந்து உச்சி வரைக்கும் ஏறி ஊர் முழுக்க பாப்போம். அதுல ஏர்றது ரொம்ப ரிஸ்கான காரியம், படிகள் ஒழுங்கா இருக்காது. கால் கைகளால, தூண் இடுக்குல உடம்ப வெச்சு கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறனும். முதல் நிலை  வரைக்கும் வெளிப்புறமா ஏறனும். யாராவது பாத்தா திட்டுவாங்கனு பயந்துக்கிட்டே வேகமா ஏறுவோம். பெரும்பாலும் மதியம் இரண்டரை - மூன்று மணி போல ஆள் நடமாட்டம் இருக்காது அந்த பகுதியில. அப்ப எங்களோட சாகசத்த வெச்சிப்போம். முதல் நிலைக்கப்புறம் உட்புறமா ஏறுவோம். வெளில யாருக்கும் தெரியாது.  மேல் நிலையிலிருந்து உட்புறமா கீழ விழுந்தாலும் யாருக்கும்  தெரியாது, இளங்கன்று பயமரியாதுன்னு சொல்லுறதுகேத்தாப்ல அப்படி தேவையில்லாத ரிஸ்கான வேலைதான். ஆனா, ஆர்வத்தோட ஏறுவோம். இப்ப நெனைச்சா பயமா இருக்கு. உச்சில ஏறி ஊர் முழுக்க சுத்தி சுத்தி பாத்திருக்கோம்.. என்னதான் ரிஸ்க் எடுத்தாலும் அந்த ஏரியல் வியூ செமையாத்தான் இருக்கும்.

சிரிப்போ சிரிப்பு :

சின்னஞ்சிறு கிளி ஏன்  என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையெனும் ஓடம் வழங்கி வந்த பாடும்போது நான் தென்றல் காற்றினிலே வரும் கீதம் சங்கீதம் நீதானே என் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளும் ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலை புஷ்பங்களே என் சோதனைமேல் சோதனை போதுமடா சாமியே சரணமையப் ருவமே நீ புதிய பாடல் பாடு, உன் இளமை இதோ இதோ.. இனிமை இதோ இதொட்டால் பூமலரும் தொடாமால் நான் பாடிய முதல் பாட்டு அவள் பேசிய தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தப் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறக்கும் போதும் அழுகின்றான், இறக்கும் போனால் போகட்டும் போடா. இந்த பூமியில் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. நான்.. நான்..

இது போன்ற தொடர்ச்சியான பாடல்களை உடையது 'முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்'...

--- 'சிரிப்போ சிரிப்பு'   (சிட்டி பாபு & மயில்சாமி )கேசட்டில் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கேட்டது..


கொசுறு : இது பழைய ஞாபகம் அல்ல -- நல்லவர்களுக்கு எந்நாளும் இனிய, நல்ல நாளே. அப்படி இருக்கையில் அதென்ன விசேஷம் 11-11-11. அன்றையத்தினத்தில் குழைந்தை டெலிவரி செய்ய பல மக்கள் ஆர்வமா இருக்காங்களாம், டாக்டர் கிட்ட ஆபரேஷனுக்கு அப்பாயின்மென்ட் வாங்கி இருக்காங்களாம். 'ப்ளான்' பண்ணி பண்ணா நல்லாத்தான் இருக்கும், அதுக்காக இப்படியா ? 

டிஸ்கி : இது எனது 200 வது பதிவு