முதலில், இத்தொடர் பதிவிற்கு அழைத்த '
எங்கள்-ப்ளாக்' நண்பர்களுக்கு நன்றி. அதே சமத்தில் தாமதமாக இப்பதிவினை எழுதியமைக்கு 'எங்கள்-ப்ளாக்', என்னை மன்னிப்பார்களாக.
'பதின்ம வயது' -- 11 முதல் 19 வயது வரை என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் 'டீன் ஏஜ்' என சொல்லுவது 13-19 வயது வரை குறிப்பிடப்படும்.
இவற்றில் எதனை நீங்கள் நினைத்தீர்கள் என சரியாகத் தெரியாதலால், நான் இரண்டிற்கும் பொதுவான வயது நிகழ்வுகளை சொல்லுகிறேன். லிஸ்ட் பெரியதாக இருக்குமாதலால் அவற்றுள் முக்கிய நிகழ்வுகளான விளையாட்டுக்களை பற்றி இங்கு சொல்ல விழைகிறேன். நா ரொம்ப விளையாட்டு பிள்ளை. (மற்றவைகளை தனித்தனி பதிவாகப் போடலாமல்லவா ?)
குறுப்பிடும் படி விளையாடிய விளையாட்டுகள்.
உள்-அரங்கு விளையாட்டுகள் :
'பகடலி' (Pagadali - இது பளிங்கு (கோலிக்குண்டு) விளையாட்டு ஒரு போர்டில் ஆணிகள் 'V, W, U' சிறிய, பெரிய வடிவங்களில் அடிக்கப்பட்டு எண்கள் எழுதப்பட்டிருக்கும்.. ஒரு ஓரத்திலிருந்து பளிங்கினை ஜென்டிலாக தட்ட வேண்டும். அது எந்த எண்களின் ஆணிகளில் மாட்டிக் கொள்கிறதோ, அத்தனை பாயிண்டுகள். -- விண்டோஸ் XPல் 'pinball' எனப் பெயர்)
'தாய கட்டம் (கட்டை)' -- மகாபாரதத்தின் முக்கிய பாத்திரம் இது. எனக்கு, முக்கியமாக சம்மர் லீவில் மிகவும் பிடித்த விளையாட்டு.
'பரம பதம்' -- 'வைகுண்ட ஏகாதசி'யில் விளையாடினால் நல்ல பலன் கிடைக்குமென நம்பிக்கை.
'சொட்டாங்கல்' - பாட்டுப் பாடிய படியே கற்களை மேலே போட்டு பிடித்து விளையாடும் விளையாட்டு.
சாம்பிள் : "
மூணு - முக்கிடு சிக்குடு பாவக்காய், முள் இல்லாத ஏலக்காய்."
'சில்லுக்கோடு' -- மூன்று விதமான வகைகை உண்டு. இது உள் மற்றும் வெளி அரங்கு விளையாட்டு.
'செஸ்' -- எனது சகோதரர்கள் அனைவரும் என்னை விட நன்றாக விளையாடுவார்கள். அவர்களில் ஒருவர் தேசிய அளவில் விளையாடி இருக்கிறார். ஒருமுறை 'ஊட்டி' டோர்னமெண்டில் 'செஸ்' ஆனந்தின் ரூம் மேட்டாக இருந்திருக்கிறார்.
'ராஜா - ராணி - திருடன் - போலிஸ்' -- நான்கு பேர் விளையாடும் விளையாட்டு. நான்கு சீட்டுக்கள் எழுதப்பட்டு ஒவ்வொரு ரவுண்டிலும் குலுக்கிப் போட்டு எடுத்து போலிசு திருடனை அடையாளம் காண வேண்டும்.
"ரம்மி, ஆஸ், திருடன், 420 ", வித விதமான சீட்டுக் கட்டு விளையாட்டுகள் விடுமுறை நாட்களில் இரவு முழுவதும் வெட்ட வெளியில் (வாசற்புறத்தில்) விளையாடிய அனுபவமுண்டு.
வெளி-அரங்கு விளையாட்டுக்கள் :
'கிட்டிப்புள்' -- இரு குழுக்களாக விளையாடுவது மரபு. இருப்பினும் எனக்கு, ஒண்டிக்கு-ஒண்டி மிகவும் பிடித்த விஷயம்.
'பேந்தா' கோடு / கட்டம் போட்டு மூன்று பளிங்குகளை உள்ளே வைத்து மற்ற பளிங்கியால் அடித்து வெளிய எடுக்க வேண்டும். ஒரு வகை பளிங்கு விளையாட்டு.
'கவை குச்சி' -- மெல்லிய மூங்கில் குச்சி '7' போன்ற வடிவம் ஒருவன் Catcher .. அவனுடைய குச்சி கீழே கிடக்கும், மற்றவர்கள் அதனை இழுத்துச் செல்வர். கேச்சரிடம் பிடிபடாமல் இருக்க, அவன் தன்னை நெருங்கி வரும் சமயம், தன்னுடைய கவை-குச்சியை 'சாணம், பாராங்கல், இலை, போன்ற' குறிப்பிட்ட வஸ்துக்களின் மீது வைத்திருக்க வேண்டும்.
'Seven Beaten' -- தட்டையான 7 சில்லுகள் (கற்கள்) ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து இரு குழுவாக விளையாடும் விளையாட்டு. ஒரு குழுவில் ஒவ்வொருவராக, சற்று தூரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் 7 சில்லுகள் (கற்கள்), பந்தினால் அடித்து கீழே தள்ள வேண்டும். அப்படி செய்தால், உடனே எதிரணியினரால் பந்தடி வாங்காமல், மீண்டும் எல்லா கற்களையும் மீண்டும் அடுக்கி (கீழே விழாமல்), 'Seven Beaten ' எனச் சொல்லி, அதனை சுற்றி ஒரு வட்டமிட்டால் ஒரு 'பாயிண்டு'. அப்படி செய்யும் முன்னரே, அவர்கள் அணியில் யாராவது பந்தடி வாங்கினால், எதிரணியினருக்கு கற்களை அடித்து மீண்டும் வைக்க வாய்ப்பு வழங்கப்படும். இப்படி வாய்ப்பு மாறி மாறி வரும். அதிக பாயிண்டுகள் எடுத்தவர்கள் 'winner' ஆவார்கள்.
'இரட்டை கோடு, சீறு-கோடு, அமுக்கு டப்பான்' -- வகை-வகையான பம்பர விளையாட்டுக்கள்.
பம்பரத்தினை லாகவமாக கையில் ஏந்தி மற்ற பம்பரத்தினை தட்டி ஓட வைப்பது ஒரு கலையாகும். பம்பரம் கையில் சுற்றும்போது, அதன் வெயிட் தெரியாமல் பம்பரத்தின் ஆணி, பூண் ( மிதிவண்டியில் காற்று வெளியே வராமல் தடுக்கும் 'Valve' மீது உள்ள திருகு ) போன்றவை சரியான முறையில் பொருத்தப் பட்டிருக்க வேண்டும். ஒரு முறை, சாட்டையினால் ஓங்கி வீசப்பட்ட பம்பரம், நண்பர் ஒருவரின் தலையில் பட்டு ரத்தம் வந்து ஆஸ்பத்திரி சென்று தையல் போட வேண்டிய கொடூரமான நிகழ்வும் நடந்தது உண்டு.
'பே-பே' -- பாடலுடன் ஆரம்பமாகும் விளையாட்டு. ஒருவர்(1 ) கையில் பந்து இருக்கும். அவர் பாடலை (விளையாட்டினை) பாடுவார். பின்வருமாறு பாடல் செல்லும்..
1 : பே - பே
மற்றவர்கள் : என்னாப் பே ?
: பந்து பே
: என்னாப் பந்து ?
: ரப்பர் பந்து
: என்னா ரப்பர் ?
: இந்தி(யா) ரப்பர்
: என்னா இந்தி(யா)?
: வட இந்தி(யா)
: என்ன வட (வடை) ?
: ஆமை வட (வடை)
: என்ன ஆமை ?
: கொ(கு)ளத்தாமை.
: என்ன கொ(கு)ளம் ?
: திரி(ரு)க் கொ(கு)ளம்.
: என்னத்் திரி ?
: விளக்கு திரி.
: என்ன விளக்கு ?
: குத்து விளக்கு.
: என்ன குத்து ?
: கும்மாங் குத்து..
(என்று சொல்லி, பந்தை வீசி யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம், தொடர்ந்து பந்து யாருக்கு கிடைக்கிறதோ அவர் மற்றவரை அடிக்கலாம். என்ன வன்முறையான விளையாட்டு.. ஆனாலும்..... ஜாலிக்காக விளையாட, சில சமயம் சண்டையிலும் முடிவடையும். இளங்கன்று பயமரியாதல்லவா ? )
இப் பதிவினை தொடர நான் அழைப்பவர்கள் : -- பெயர் சொல்ல விருப்பமில்லை, சாய் ராம் கோபால், சித்ரா. நீங்கள் விளையாட்டினை (விளையாட்டாக) எழுதவேண்டும் என்பதல்ல (சீரியசாக்கூட எழுதலாம்). எனக்குப் பிடித்ததால், இங்கு விளையாட்டினை பற்றி எழுதினேன்.
மீண்டும் நன்றி டு 'எங்கள் ப்ளாக்'