இந்த ஆண்டில் உங்கள் அனைவருக்கும் மன-மகிழ்ச்சி பெருகட்டும்..
கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க.. வருடம் என்று ஒன்று இல்லை என்றால் ? கஷ்டம்தான்.. எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வேண்டும்தான? அதான்.. காலத்தை கணக்கு பண்ணுறதுக்கு 'வருட' முறை வந்திச்சு.
பூமி சூரியனை சுற்றி வரும் பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளமாக வைத்துக் கொண்டு.. அது, அடுத்த முறை அதே இடத்திற்கு வந்தால், ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு ஆரம்பமாகிறது. இவ்வாறு காலத்தை கணக்கிடுவதால், கால நிலைகளை மனதில் நிறுத்தி, அதற்கேற்றவாறு நாம் வாழ வழிமுறைகளை செய்து வருகிறோம். இந்தக் கணக்கு இல்லையென்றால், பருவநிலை எதிர்பாராமல் வந்து செல்லும், மக்களுக்கு கஷ்டத்தை தரும். (இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. ?)
அந்த வகையில் உலக அளவில் பொதுவான ஆண்டு முறையாக கிருகோரியன் (gregorian) முறையில் 2010ம் ஆண்டு முடிந்து, 2011 ம் ஆண்டு வருவதை நாம் அனைவரும் ஆவலோடு வரவேற்று.. உறவினர் மற்றும் நண்பர்களுக்குள் தத்தம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள், முதாலவது நாளான ஜனவரி ஒன்றில்.
இந்தியாவில் பலவித நாட்குறிப்பு முறை இருப்பதனால், பல புத்தாண்டு நாட்கள் கொண்டாடப் பட்டு வருகிறது. அவற்றுள் எனக்குத் தெரிந்த சிலவற்றை பட்டியல் இடுகிறேன் உங்கள் பார்வைக்காக..
வேறு பல புத்தாண்டு தினங்கள் (இந்தியாவில்) :
போக பிகு : இதுதான் அசாமியர்களின் புத்தாண்டோட பேரு. இது ஒரு அரசு விழாவாகும். பாரம்பரிய உடைகளை அணிவர் ஆண்களும் பெண்களும். பெரும்பாலும் ஏப்ரல் மத்தில (13 , 14 15 தேதிகள்) வரும். 'பிகு' முறை நடனங்கள் ஆடியும், 'ஹுசுரிஸ்' எனப்படும் கீதங்களைப் பாடியும் கொண்டாடுவார்கள். சில நாட்கள் வரை இந்த கொண்டாட்டங்கள் தொடரும்.
நபோ வர்ஷோ : இது வங்காள மக்கள் கொண்டாடும் புத்தாண்டு தினமாகும். வீடுகளை புத்தம் புதிய மலர்களால் அலங்கரித்தும், வண்ண அரிசிகளை வைத்து கோலங்கள் இடுவார்கள். இதனை 'அல்பன' என அழைப்பார்கள். பெண்கள் சிவப்பு மற்றும் வெள்ளை சேலைகளை அணிவர், ஆண்கள் வேஷ்டி குர்தா அணிவார்கள். பெரும்பாலும் இதுவும் ஏப்ரில் 13 , 14 , 15 தினங்களுக்குள் வரும். வருடத்தின் முதல் மாதம் பைகாசி (வைகாசி) எனவே, இந்த தினத்தை பைசாகி எனவும் சொல்லுவர்.
பெஸ்து வரஸ் : இது குஜராத்திய புது வருட தினம் ஆகும். தீபாவளிக்கு அடுத்த அல்லது இரண்டாம் நாள் வரும். புத்தாடை உடுத்தி, 'கோவர்த்தன் பூஜா' என்னும் பாரம்பரிய வழி பாட்டு முறைப்படி , கோவர்த்தன பர்வதத்தினை நினைத்து வழி பட்டு. உற்றார் உறவினர் இல்லங்களுக்குச் சென்று இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். தீபாவளிமுதல் அடுத்து வரும் ஐந்தாறு தினங்கள் வரை கொண்டாட்டம்தான். பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு விடுமுறைதான். வணிக வழக்குகளும் இருக்காதுதான். புதிய காரியம் எதனையும் அதற்குப் பின்னரே ஆரம்பம் செய்வார்கள். தீபாவளியை விட, புத்தாண்டை பட்டாசு, வானவேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.
யுகாதி : யுகத்தின் (வருடம்) ஆதி (ஆரம்பம்) என்கிற அர்த்தத்தில் இந்த நாள் மார்ச் 13 முதல், ஏப்ரல் 15 க்குள், அமாவாசையை ஒட்டி வரும். இதனை ஆந்திர மாநில தெலுகு பேசும் மக்கள் கொண்டாடுகின்றனர். வீடுகளை சுத்தம் செய்து, மாவிலை, தென்னை இலை தோரணம் கட்டி, காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை உடுத்தி, இறைவனுக்கு படையலிட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி கொண்டாடுவார்கள். 'யுகாதிப் பச்சடி' எனப்படும் பல்சுவை பச்சடி இன்றைய சிறப்பு உணவு பதார்த்தமாகும்.
விஷு : இந்த பெயரில் கேரளா மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினத்தில் காலையில் எழுந்தவுடன் கண்ணில் படும் பொருட்கள் மிகவும் நல்லதாக இருக்க வேண்டும் என்பதனாலேயே, அருகில் ஓலைச் சுவடி, தங்க ஆபரணங்கள், வெள்ளைத் துணி, பச்சை அரிசி, மஞ்சள் வெள்ளரி, வெற்றிலை, கொன்ன மலர்கள், பாதியாக வெட்டப்பட்ட பலாப் பழம், புனித கிரந்தங்கள் மற்றும் தேங்காய் ஆகியவற்றினை வெய்த்திருப்பார்கள் எனக் கேள்வி பட்டேன். காலையில் புனித நீராடி, 'கொடி வஸ்திரம்' அணிந்து பாரம்பரிய ஆட்டம் பாட்டத்துடன், இனிப்பான அன்னமுண்டு கொண்டாடுவார்கள்.
பைசாகி : சீக்கய குருமாரின் அறிவுரைப் படி, ஜாதிகளை ஒழித்து 'கால்ச பந்த்' எனப் பெயரிட்டு நிறுவிய நாளையே, அவர்கள் புத்தாண்டு தினமாக 'பைசாகி' எனப் பெயரிட்டு கொண்டாடுகின்றனர். இது அவர்களின் அறுவடை திருநாளும் ஆகும். ஆண்களும் பெண்களும் ' ஜட்டா ஆயி பைசாகி' (வந்து விட்டாள் பைசாகி ) எனப் ஆடிப் பாடி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
தீபாவளி : ராஜஸ்தானில் இருக்கும் மார்வாடிகள், தீபாவளி தினத்தையே புத்தாண்டு நாளாக கொண்டாடுவார்கள். இந்த தினத்தில் புதிய செயல்கள் ஆரம்பித்தால் அவை வெற்றி கரமாக முடியும் என்ற நம்ம்பிக்கை கொண்டவர்கள்.
குடி பாட்வா : 'பாட்வா' அப்படீன்னா ஒரு அறுவடை பருவம் முடிந்து அடுத்த பருவம் ஆரம்பம் என்பதாகும். இதுவும் பெரும்பாலும் 'யுகாதி' யுடன் சேர்ந்து வரும். மராட்டியர்கள் கொண்டாடுவதாகும். பிரம்மா புராணத்தின் படி, இந்த நாளில், அண்டம், பிரம்மாவினால் தோற்றுவிக்கப் பட்டது. ராமன், ராவணனை போரில் வென்று வெற்றிச் சக்கரவத்தியாக ஊர் திரும்பிய நாளாகவும் அவர்கள் கொண்டாடுகிறார்கள். பிரம்மாவின் கொடியானது, மகிழ்ச்சியையும், வெற்றியையும் குறிப்பதானால், எல்லா வீடுகளிலும் அந்தக் கொடியினை ஏற்றி பிரம்மாவை சிறப்பிக்கிறார்கள்.
தமிழ்ப் புத்தாண்டு தினம் : இதப் பத்தி நா சொல்லி உங்களுக்கு தெரியுறதுக்கு ஒண்ணுமே இல்லை. நாமலாம் ரொம்பவே அதிர்ஷ்டம் செஞ்சவங்க.. நமக்குத்தான் வருஷத்துல ரெண்டு தடவை வருமே இந்த நாளு.. ஒண்ணு அரசுக்காக.. மத்தது நமக்காக..
---------- அப்புறம் முக்கியமா.... (நான் பார்த்து, படித்து, ரசித்தவை)
இதல்லாம் தவிர உலக அளவில் பலவிதப் புத்தாண்டு தினம் ஏதேதுன்னு தெரிஞ்சிக்கணும்னா, கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்த்து படித்துக் கொள்ளுங்கள்.
பலவித மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த சுட்டிய சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.
ஆங்... கேக்க மறந்துட்டேன்.. 'நியு இயர் ரெசலுஷன்' எடுத்தாச்சா ? அத எப்படியாவது காப்பாத்துங்க.... 'நாணயம் மாறலாம், ஆனால், நா(வின்)-நயம் மாறக்கூடாது '.... .அப்படீனா ('நியு இயர் ரெசலுஷன்') என்னவா ? படிங்க இந்த வலைமனை மேட்டர.. அப்பவாவது புரியுதான்னு பாக்கலாம். தமாஷான 'நியு இயர் ரெசலுஷன்' வேணும்னா இங்க போயிப் பாருங்க..
டிஸ்கி : 'அப்புறம் முக்கியமா' -- சுட்டி தரும் பழக்கம், வலைச்சரம் எழுதும்போது வந்தது(நல்லாத்தான் இருக்கு).. இன்னும் என்னை விட்டு போகலை.. அதான்.. அட்ஜஸ்ட் ப்ளீஸ்..
------------------------------------------------